அரச சொத்துக்களை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தி சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான சூழலை உருவாக்குவதற்கான படிமுறைகளை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பினால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :
உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட வேளையிலிருந்து இதுவரை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் வாகனங்களைப் பயன்படுத்தல், அபிவிருத்திக் கருத்திட்டங்களை திறந்து வைத்தல் மற்றும் நலன்புரித் திட்டங்களை மேற்கொள்ளல் போன்றவற்றை தமது கட்சியின் வேட்பாளர்களின் பரப்புரைக்காகப் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தற்போது அவர்கள் தொழிநுட்ப ரீதியாக வேட்பாளர்களாக இல்லாததுடன், தற்போதுள்ள சபை உறுப்பினர்களில் அதிகமானவர்கள் எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர்களாக நியமனம் பெறுவது பொதுவான நிலைமையாகும்.
அத்துடன், இவர்கள் தேர்தல் முடிவடையும் வரைக்கும் சபைகளின் வளங்கள் மற்றும் சொத்துக்களைப் பயன்படுத்தக் கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன.
இந்நிலைமையைத் தடுப்பதற்கு ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த வேண்டியதுடன், அவ்வாறு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடுவதற்கான சமத்துவம் இழக்கப்படும்.
அதனால், இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், நகர ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்களை தெளிவுபடுத்தி உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வளங்கள் மற்றும் சொத்துக்களை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தி சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான சூழலை உருவாக்குவதற்கான படிமுறைகளை மேற்கொள்ளுமாறு தங்களிடம் வேண்டிக்கொள்கின்றோம்.