பாராளுமன்றத்தை நிறைவேற்றுத்துறை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது

89 0

பாராளுமன்றத்தை சபாநாயகர் நிர்வகிக்கவில்லை,நிறைவேற்றுத்துறை நிர்வகிக்கிறது.இந்த பாராளுமன்றத்திற்கு கௌரவம்,சுயாதீனம்,சுய ஆதிக்கம் ஏதும் கிடையாது,நிறைவேற்றுத்துறை பாராளுமன்றத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

இது ஜனநாயக நாடா என்பதை உலகம் அவதானிக்க வேண்டும்.பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

ஆகவே இயற்றப்பட்ட சட்டங்களை தூக்கி எரிந்து விட்டு புதிதாக சட்டமியற்ற வேண்டும் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம் நாட்டுக்கு அவசியம் என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை.தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா,இல்லையா என எதிர்க்கட்சி தலைவர் பிரதமரிடம் முன்வைத்த கேள்விக்கு உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுமா? பிற்போடப்படுமா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுகிறது.

பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றல் கடமையில் இருந்து விலகுமாறு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டார்.

கட்டுப்பணத்தை ஏற்றல் கடமையில் இருந்து விலகுமாறு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அறிவித்ததாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்,அமைச்சரவையில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தடையேற்படும் வகையில் செயற்படுவது 3 வருட கால சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் குற்றமாகும்.அரச நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுக்காத ஏதேனும் நடவடிக்கை உள்ளதா என்று குறிப்பிட முடியுமா,ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடுகளில் இவ்வாறான நிலை இல்லை வெட்கபட வேண்டும்.

தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதை ஒரு மாதத்திற்கு பிற்போடுவதாக நீதியமைச்சர் இரு முறை வாக்குறுதி வழங்கினார் ஆனால் புதன்கிழமை (18) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அந்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டன.

இலங்கையின் அரச நிர்வாக தலையிடா கொள்கையின் பிரகாரம் முன்னெடுக்கபட வேண்டும்.ஒரு துறையின் செயற்பாடுகளில் பிறிதொரு துறை தலையிட கூடாது,ஆனால் தற்போது நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையில் நேரடியாக தலையிடுகிறது.

இந்த பாராளுமன்றத்தில் சுயாதீனம்,கௌரவம் ஏதும் தற்போது மலினப்படுத்தப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தை நிறைவேற்றுத்துறை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

பாராளுமன்றத்தை சபாநாயகர் நிர்வகிக்கவில்லை,நிறைவேற்றுத்துறை நிர்வகிக்கிறது. குவலைக்குரியது.நான் எழுதிய சட்ட புத்தகம் அனைத்தையும் குப்பை தொட்டியில் போடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கவுள்ளேன்.

தேர்தலை நடத்துவதை பிற்போட முறையற்ற வகையில் அரசாங்கம் செயற்படுவது வெறுக்கத்தக்கது,இது ஜனநாயக நாடா என்பதை உலகம் அவதானிக்க வேண்டும் என்றார்.