முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் தீர்மானத்திற்கு அடிபணியாத சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்டளைக்கு அடிபணிய கூடாது. நாட்டு மக்களின் அபிலாசைக்கு அமைய சபாநாயகர் செயற்பட வேண்டும்.
காற்சட்டையுடன் வீடு செல்வதா அல்லது மக்களிடம் சொல்லி காற்சட்டையை கழற்றி,காற்சட்டையை தலையில் வைத்துக் கொண்டு வீடு செல்வதா என்பதை ஜனாதிபதி தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை ஜனநாயக நாடு என்பதை ஜனாதிபதி உட்பட அரசாங்கம் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.1931 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களின் சர்வசன வாக்குரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.
மக்களாணை சிறிதும் இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலவந்தமான முறையில் தேர்தலை நடத்துவதை பிற்போட முயற்சிக்கிறார்.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம் சிறந்தது,ஆனால் அதனை நிறைவேற்றும் தருணம் இதுவல்ல,தேர்தல் செலவுகளை குறைக்க வேண்டும் என்ற உண்மை நோக்கம் அரசாங்கத்திடம் இருக்குமாக இருந்தால் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை ஆறு மாத காலத்திற்கு முன்னரே கொண்டு வந்திருக்க வேண்டும்,அவ்வாறு கொண்டு வந்திருந்தால் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் சமர்ப்பிக்கும் தருணத்தில் தேர்தல் சட்டத்தை மாற்றும் வகையில் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றினால் அது தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,புதிய சட்டத்திற்கு அமைய தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு குறைந்தபட்சம் இரு மாதங்களேனும் செல்லும்,அவ்வாறாயிpன் தேர்தலை பிற்போட நேரிடும்.இதுவே ஜனாதிபதியின் நோக்கம்.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதை ஒரு மாத காலத்திற்கு பிற்போடுவதாக நீதியமைச்சர் விஜயதாஸ பாராளுமன்ற ஆலோசனை குழு,பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் குறிப்பிட்டார்.பாராளுமன்ற குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி மாற்றியமைத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும்,சபாநாயகரின் சான்றுரை கிடைக்கப்பெற்றவுடன் அது சட்டமாக அமுல்படுத்தப்படும்.
நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை என ஆளும் தரப்பினர் மாத்திரம் தான் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.தான்தோன்றித்தனமாக செயற்படும் அரசாங்கத்திற்கு மக்கள் தேர்தல் ஊடாகவே பதிலடி கொடுக்க முடியும்.மக்கள் தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் தீர்மானத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அக்காலத்தில் அடிபணியவில்லை,அதுபோல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்டளைகளுக்கு சபாநாயகர் அடிபணிய கூடாது.மக்களாணை இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி தேர்தலை கண்டு அச்சமடைகிறார்.
ஆனால் சபாநாயகருக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு மதிப்பு உள்ளது ஆகவே சபாநாயகர் மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார். காற்சட்டையுடன் வீடு செல்வதா அல்லது,மக்களிடம் குறிப்பிட்டு காற்சட்டையை கழற்றி,காற்சட்டையை தலையில் வைத்துக் கொண்டு வீடு செல்வதா என்பதை ஜனாதிபதி தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.மக்களின் அபிலாசைக்கு எதிராக தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நேர்ந்த கதியே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நேரிடும் என்றார்.