சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாளை அரசு கொண்டாடுவது சட்ட விரோதம் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகுவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வழக்கில் தொடர்புடைய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி மற்றும் 10 கோடி அபராதத்தொகை செலுத்த வேண்டும் என தண்டனை பெற்றது தமிழக மக்கள் அறிந்ததே.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னரே ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரே முதல் குற்றவாளி எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரண்டாவது குற்றவாளி சசிகலாவின் அரசாக தற்போது செயல்பட்டு வரும் எடப்பாடி அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி 69 லட்சம் மரக்கன்றுகள் நடுவது, மருத்துவத்துறை சார்பில் 690 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற விழாக்களை அரசு விழாவாக நடத்தி முடித்திருக்கிறது.
இந்த விழாக்கள் ஊழல் குற்றவாளிகளான ஜெயலலிதா மற்றும் சசிகலாவை முன்னிலைப் படுத்தும் விழாக்களாகவே நடந்து மடிந்திருக்கின்றன. இதில் தலைமைச்செயலாளர், அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்றோர் கலந்து கொண்டிருப்பதும் சட்டவிரோதச் செயலாகும்.
அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்படுவதை யாரும் விமர்சிக்கப் போவதில்லை. அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அக்கட்சி சார்பில் 10 நிமிடத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாள், அரசு சார்பான விழாக்களாக நடத்தப்படும் போது மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து மக்களின் வரிப் பணத்தை வீணடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அரசுத் துறை தொடர்பான நிறுவனங்கள், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் அவர்களது அலுவலக மேஜைகள், சட்டைப்பைகள் என அனைத்திலும் ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதும் கண்டிக்கத்தக்கது என்பதோடு சட்டத்தை அவமதிக்கும் செயலாகவே தமிழக மக்கள் கருதுகிறார்கள்.
இந்தக் தவறான முன்னுதாரணம் தொடருமானால் வரும் காலங்களில் சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்ற குற்றவாளிகளின் பிறந்த நாள்களையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.எனவே தமிழக ஆளுநர் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தி தனது கடமையை சரிவரச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.