பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவு தொட்டி என்ற ‘செப்டிக் டேங்க்’ சுத்தம் செய்தபோது பலியான 141 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் ஆகியவற்றுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய தடை கோரியும், சுத்தம் செய்தபோது பலியானவர்களுக்கு இழப்பீடு கோரியும் மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் ஏ.நாராயணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளர் லட்சுமி பிரியா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாதாள சாக்கடை சுத்தம் செய்தபோது 141 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 13 குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை ஏற்படுத்த 144.80 கோடி ரூபாய் செலவில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 679 வீடுகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதத்துடன் 23 ஆயிரத்து 481 சமுதாய கழிப்பிடங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 11 ஆயிரத்து 410 கழிப்பிடங்கள் 94.08 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை பாதாள சாக்கடை சுத்தம் செய்பவர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 28-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.