புதுவை ஆட்சியாளர்கள் மக்களை சந்திக்க பயப்படுகிறார்கள்: இல.கணேசன் எம்.பி. தாக்கு

260 0

புதுவை ஆட்சியாளர்கள், ஆட்சி செய்தவர்கள் மக்களை சந்திக்கவே பயப்படுகிறார்கள். அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் மாநிலங்களவையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து வலியுறுத்துவேன் என இல.கணேசன் எம்.பி. கூறினார்.

மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

உள்ளாட்சி தேர்தல் வெற்றியை நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். அதே போல் புதுவை மாநில பாரதீய ஜனதா சார்பில் காமராஜர் சிலை அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மாநில தலைவர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இல.கணேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று காங்கிரசார் கூறினர். தங்களுக்கான பாதிப்பை மக்களுக்கான பாதிப்பாக கூறுவது காங்கிரசின் வழக்கம்.

அதையே உயர் மதிப்பு ரூபாய் நோட்டு பிரச்சினையிலும் பேசினர். ஆனால், இந்த அறிவிப்புக்கு பிறகு பல மாநிலங்களில் பாரதீய ஜனதா தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகம், புதுவையிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வருகிற மே 15-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

புதுவை ஆட்சியாளர்கள், ஆட்சி செய்தவர்கள் மக்களை சந்திக்கவே பயப்படுகிறார்கள். அடுத்த பாராளுமன்ற கூட்ட தொடரில் மாநிலங்களவையில் புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து வலியுறுத்துவேன்.

இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

அவரிடம் புதுவை கவர்னர் அரசின் விவகாரங்களில் தலையிடுகிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இல.கணேசன், புதுவை கவர்னர் கிரண்பேடி மக்களுக்காக நன்றாக பணிபுரிகிறார். நல்ல காரியங்களை காங்கிரசார் எதிர்ப்பதும், குறை கூறுவதும் வழக்கம்தான் என்றார்.