திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் 2 பெண்கள் பலி

260 0

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் 2 பெண்கள் உயிரிழந்ததையடுத்து, நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் எச்1, என்1, எனப்படும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ‘இன்ப்ளூயன்சா’ என்ற வைரஸ் கிருமி மூலம் இவை பரவுகிறது.

திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு நோயின் தாக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு பன்றிக் காய்ச்சல் பாதித்த நோயாளிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். ஆனாலும் போதிய விழிப்புணர்வு இன்மையால் நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல் பாதித்த மேலும் 2 பெண்கள் பலியாகி உள்ளனர்.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த வைரவேலின் மனைவி சுந்தரம்மாள் (வயது 60). சில நாட்களாகவே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.

இதையடுத்து திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி (66) பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரும் நேற்று உயிரிழந்தார். இதனால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் பன்றி காய்ச்சல் நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.


( படம்) – திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனி வார்டு கட்டிடம்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடத்தின் 3 மற்றும் 5-வது மாடியில் தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு அங்கு 80-க்கும் மேற்பட்ட பன்றி காய்ச்சல் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பலர் குழந்தைகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.