இயற்கை வண்ணங்களை கொண்டு பொங்கல் கோலம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ

89 0

செயற்கை வண்ணங்களைத் தவிர்த்து, இயற்கை வண்ணங்களைக் கொண்டு பொங்கல் கோலமிட்டு ஐஏஎஸ் அதிகாரிசுப்ரியா சாஹூ விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

கோலங்கள் இன்றி தமிழ் பண்டிகைகள் இல்லை. தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கலுக்காக மார்கழி மாதம் முழுவதும் கோலமிட்டு மாட்டு சானம் வைத்து அதன் மீது பூசணி மலர்களை வைத்து, அடுத்த நாள் அதை வறட்டியாகத் தட்டி உலர்த்துவார்கள்.

பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பானை பொங்க அதுதான் இயற்கை எரிபொருள். அன்று கோலமிடும்போது அரிசி மாவு, செம்மண் ஆகியவற்றைக் கொண்டே கோலமிட்டனர். அரிசி மாவு எறும்பு உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாகவும் இருந்தது. செம்மண் இயற்கையாகவே மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும்.

இவ்வாறு இயற்கையோடு இணைந்த தமிழர்களின் வாழ்க்கை முறை மாறிஇன்று பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழாக்காலங்களில் இயற்கை வண்ணங்களுக்குப் பதிலாக அதிக அளவில் செயற்கை வண்ணங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய வண்ணங்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. மண்வளத்தையும் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், செயற்கை வண்ணங்களைத் தவிர்த்து, இயற்கை வண்ணங்களில் கோலமிடுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூஇயற்கையாகக் கிடைக்கும் வண்ணங்களைக் கொண்டு கோலமிட்டு, அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

மேலும், அரிசி, அரிசி மாவு, கோதுமை மாவு, மஞ்சள் தூள், முருங்கை இலை தூள், குங்குமம் போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டே அந்த கோலத்தை இட்டதாகவும், இவை அனைத்தும் பறவைகள் மற்றும் எறும்புகளுக்கு உணவாகும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் செயலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.