“இதுவரை பாராளுமன்றத் தேர்தல் 4 கட்டங்களாக நடத்திய மத்திய அரசு, மேற்கு வங்கம் ஒரு மாநிலத்தில் மட்டும் 3 கட்டங்களாக தேர்தலை நடத்திய மத்திய அரசு, ஒரே நாளில் அனைத்து சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் எப்படி தேர்தல் நடத்துவீர்கள்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின், தமிழ் மீட்சி பாசறை சார்பில் தமிழ்நாள் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இந்த விழாவுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலில் இது ஒரே நாடா என்ற கேள்விக்கு யார் என்னிடத்தில் பதில் சொல்வார்கள்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் இதெல்லாம் ஏற்புடையது அல்ல. முன்னாள் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோபால் கவுடா, அண்மையில் டெல்லியில் நடந்த ஜனநாயகத்தைக் காப்போம் என்ற அரசியல் கருத்தரங்கில், இதுகுறித்து பேசியிரருக்கிறார். தேச ஒற்றுமை என்கிற பெயரில், தனித்தனி தேசங்களாகப் பிரிந்து செல்வதற்கான மத்திய அரசு வழிவகுக்கிறது. பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்கள். ஒரே மொழியைப் படி, ஒரே மதத்திற்குள் வா என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல.
இதுவரை நாடாளுமன்றத் தேர்தல் 4 கட்டங்களாக நடத்திய மத்திய அரசு, பல மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை பிரித்துப் பிரித்து நடத்திய மத்திய அரசு, குறிப்பாக மேற்கு வங்கம் ஒரு மாநிலத்தில் மட்டும் 3 கட்டங்களாக தேர்தலை நடத்திய மத்திய அரசு, ஒரே நாளில் அனைத்து சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் எப்படி தேர்தல் நடத்துவீர்கள்? எப்படி சாத்தியப்படும்?
சரி, ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்கள் ஏற்கிறோம். அது நாட்டிற்கும், மக்களுக்கு என்ன நன்மைகளை விளைவிக்கும் என்று கூறுங்கள். அதன்பிறகு, அது சாத்தியமா? தேவையா? ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து விவாதிப்போம். எதையுமே கேடப்பது இல்லை. இதனால் செலவு மிச்சாகும் என்கிறது மத்திய அரசு. அவ்வளவு சிக்கனமானவர்களா? நீங்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதி சட்டமன்றத்துக்கு செலவழிக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல் ஆணையம் அந்த தேர்தலுக்கு செலவழிக்கும். இது எப்படி சிக்கனமாகும்.
இதற்குமுன் ஒரே கல்விக் கொள்கை என்றார்கள். அறிவார்ந்த சான்றோர்கள் அத்தனை பேரும், இது புதிய கல்விக்கொள்கை இல்லை, நம் குழந்தைகளுக்கான மரண சாசனம் என்று கூறுகின்றனர். எனவே இதெல்லாம் வேலையில்லாதவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த கிளப்பிவிடுவது. சொந்தமாக ஒரு விமானம் இல்லாத நாடு, 5000 ஏக்கரில் விமான நிலையம் கட்டுவதைப் போன்றதுதான் இது” என்று அவர் கூறினார்.