‘அயலகத்துக்கு முதலிடம்’ என்ற கொள்கையின் பிரகாரம், இலங்கை மக்களின் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.
கடந்த ஆண்டு இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் அதனையே வெளிப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேகப், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் பொருட்டு இலங்கையிலுள்ள இந்திய கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு இலங்கை மலையாளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை இந்திய அரசின் அதியுயர் விருதான பிரவாசி பாரதீய சம்மான் விருது பெற்ற குமார் நடேசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இந்த அதியுயர் விருதை பெறும் இரண்டாவது இலங்கையர் அவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற இலங்கை மலையாளிகள் அமைப்பின் புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேகப் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.
அண்மையில் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் நடைபெற்ற 17ஆவது பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டின் பின்னர் நான் பங்கேற்கும் முதலாவது பொதுநிகழ்வு இதுவாகும்.
எனவே, இத்தருணத்தில் சமூகத்துக்கு ஆற்றிய சேவைக்காக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மூவினால் பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட குமார் நடேசனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 2011ஆம் ஆண்டில் மனோ செல்வநாதனுக்குப் பிறகு இந்த அதியுயர் விருதை பெறும் இரண்டாவது இலங்கையர் குமார் நடேசனாவார்.
அதேபோன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் நிறைவில் தலைவர்களின் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்று இரு தினங்களின் பின்னர் நாம் சந்திக்கின்றோம்.
அந்த நிறைவுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பகிரப்பட்ட இலக்கு மற்றும் மாற்றத்துக்கான திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் தெற்கு பிராந்தியத்தின் சமூக, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பு காணப்படுவது குறித்து விசேடமாக சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி, இவ்விடயத்தில் இலகுவானதும், நிலைபேறானதுமான தீர்வுகள் மூலம் இந்தியாவின் அனுபவம் குறித்து பகிர்வதற்கும் அவர் முன்வந்தார்.
மேலும், அவர் தடுப்பூசி தயாரிப்பு, விஞ்ஞான ரீதியிலான அடையாளங்காணல், டிஜிட்டல் பொது உற்பத்திகள், செய்மதி தொழில்நுட்பம், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்தியாவின் அடைவு குறித்து சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்தியடைந்துவரும் உலகுக்கு தொழில்நுட்பம், அறிவு, வளங்கள் ஏன் அவசியம் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும், ஆரோக்யா மைத்ரி, அதிதிறனுக்கான உலகளாவிய தெற்கு மத்திய நிலையம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உலகளாவிய தெற்கு முன்முயற்சி, உலகளாவிய தெற்கு இளம் இராஜதந்திரிகள் பேரவை மற்றும் உலகளாவிய தெற்கு புலமைப்பரிசில்கள் என்பன உள்ளடங்கலாக உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டுடன் தொடர்புபட்டு இந்தியாவினால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய செயற்திட்டங்கள் குறித்தும் பிரதமர் இதன்போது அறிவித்தார்.
‘அயலகத்துக்கு முதலிடம்’ என்ற கொள்கையின் பிரகாரம், இலங்கை மக்களின் நலனுக்கு இந்திய அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்குகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் மூலம் இலங்கை தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் கடப்பாடு நன்கு புலனாகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதை முன்னிறுத்தி கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகங்கள், கண்டியில் உள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு இலங்கை மலையாளிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் அதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலமாக செயற்படுங்கள்.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலையாளிகள் எந்தவொரு பாகத்தில் வசித்தாலும், அங்குள்ள சமூகத்துடன் அமைதியாக வாழக்கூடிய இயல்பை கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையிலும் அத்தகைய சூழ்நிலையே காணப்படுகிறது. இதுவே உங்களுடைய (மலையாளிகள்) பலம் என்பதுடன் இந்தப் பண்பை தொடர்ந்து பேணுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என்று வலியுறுத்தினார்.