ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபிறகு, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் பெரும்பான்மை கடந்த 18ஆம் திகதி சட்டசபையில் நிரூபிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல், விவசாயிகளுக்கு வறட்சிக்கான உதவித்தொகை என சில முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஈஷா யோகா மையம் நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தார்.
மேலும், மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத்தேர்வான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே நீட் தேர்வில் இருந்து முழு விலக்கை பெற முடியும். தற்போது பெற்றோர் பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சந்திப்பாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போது தமிழகத்தை உலுக்கும் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பிரச்சினை குறித்தும் இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நாளை பிரதமரை சந்திப்பதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புறப்படுகிறார். டெல்லியில் பிரதமருடனான சந்திப்பு நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அரசு வட்டாரம் தெரிவித்தது.