வசந்த முதலிகேயின் விடுதலை, பயங்கரவாதச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி காலி முகத்திடலில் நுழைவதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (16) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடி யூனியன் பிளேஸ் ஊடாக காலிமுகத்திடல் வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கொம்பனி வீதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் நுழைவாயில் ஊடாக நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.