வசந்த முதலிகேயை தடுத்துவைத்திருப்பதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்

96 0

இலங்கை அரசாங்கம் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஏழு சர்வதேச மனித உரிமை அமைப்புகள்  கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

2022 ஆகஸ்ட் 8 ம் திகதி கைதுசெய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஏழு மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆகஸ்ட் 21ம் திகதி முதல் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கைசாத்திட்ட பயங்கரவாத தடுப்பு உத்தரவின் கீழ் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என  சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நாளை 17 ம் திகதி கொழும்பு ஹல்வ்ஸ்ரொவ் நீதிமன்றத்தில் வசந்த முதலிகேயின் பிணை மனுமீதான விசாரணை இடம்பெறவுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வழமையாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் சார்பில் செயற்படும் சட்டமா அதிபர் திணைக்களம்  பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நீதிமன்றம் பிணை வழங்காது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

2022 இல் பொருளாதார நெருக்கடிகள் அரசாங்க சீர்திருத்தம் ஊழலிற்கு காரணமான அதிகாரிகளிற்கு எதிரான நடவடிக்கைகள்  அவசியம் என்ற அமைதியான ஆர்ப்பாட்டங்களை  தோற்றுவித்த பின்னர் அதற்கு எதிரான  ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக  அரசாங்கம் வசந்த முதலிகேயை கைதுசெய்தது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள்  அரசாங்கம் பொலிஸ் இராணுவத்திற்கு அதிகளவான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் ஆர்ப்பாட்டங்களிற்கு பதிலளித்தது இதன் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களை களைப்பதற்கும் மாணவர்கள் உட்பட நூற்றிற்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்வதற்கும்  அளவுக்கதிகமான படைபலம் பயன்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பலர் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனினும் அதிகாரிகள் வசந்த முதலிகேயை தடுத்துவைப்பதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள அளவுக்கதிகமான அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளனர்,அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கான எந்த ஆதாரங்களையும் முன்வைக்காத போதிலும் இவ்வாறான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் ஆர்ப்பாட்டங்களில்  முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.கைதுசெய்யப்பட்ட பின்னர் அனேக தருணங்களில் அவர் தனிமையில் மிக மோசமான நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இது சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் சித்திரவதை மற்றும் மோசமாக நடத்துவது தொடர்பான விதிமுறைகளைமீறுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளன.