பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர் கைது

101 0

ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடிபோதையில் வாகனம் செலுத்தி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹுங்கம நோக்கிச் சென்றுகொண்டிருந்த காரொன்றை சோதனைக்கு நிறுத்துமாறு பொலிஸாரினால் சமிக்ஞை செய்யப்பட்டபோது  காரின் சாரதியும், காரில் உடனிருந்த மற்றுமொரு நபரும் காரை நிறுத்தாமல் முன்னோக்கிச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த கார் பொலிஸ் குழுவொன்றினால்  மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கார் சாரதி மதுபோதையில் இருந்தமை தெரியவந்ததையடுத்து, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் 37 வயதுடைய பல்லேகம, ஹுங்கம பிரதேசத்தை சேர்ந்த ஒருவராவார்.

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் முற்பட்டபோது அவர் அதிகாரிகள் மீது பல முறை தவறான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் முகத்தில் தலையால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தியமை, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தாக்கியமை தொடர்பில் சந்தேக நபர் அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.