இரட்டைக் கொலைச் சம்பவம் – இருவர் கைது!

114 0

ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களின் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது நேற்று (15) மாவனல்லை மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மாவனெல்ல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் கடந்த 12 ஆம் திகதி ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மாவனெல்ல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவரின் சடலமே முதலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் பின்னால் அவர் புதைக்கப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது.

மாவனெல்லை, கிரிங்காதெனிய மற்றும் கெரமினியாவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் நவம்பர் 19 மற்றும் 25 ஆம் திகதிகளில் காணாமல் போயுள்ளதாக மாவனெல்லை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

26 வயதான மொஹமட் இக்பால் மொஹமட் அசார் மற்றும் 28 வயதான மொஹமட் அன்வர் மொஹமட் அர்ஷாத் ஆகிய இரு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, ரம்புக்கன ஹுரிமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி என்று கூறப்படும் ஹுரிமலுவ பர்ஹானின் வீட்டில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதைக் கண்டதாக கேகாலை பிரிவு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.

குறித்த இளைஞர்கள் இருவரும் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், கடந்த நவம்பர் மாதம் நாட்டில் ஹெரோயின் தட்டுப்பாடு ஏற்பட்ட போது ஐஸ் கொள்வனவு செய்வதற்காக இந்த போதைப்பொருள் வியாபாரியின் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான உண்மைகளை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்ததை அடுத்து, கேகாலை நீதவான் வாசன நவரத்ன, கேகாலை பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர்களுடன் இணைந்து போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் பின்பகுதியை பார்வையிட்டார்.

இதனிடையே கோழிப்பண்ணை அமைப்பதற்காக வீட்டின் பின்புறம் கான்கிரீட் தளத்தை போலீசார் தோண்டினர்.

இதனை அடுத்து குறித்த இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சம்பவத்துடன் தொடர்புடைய ஹுரிமலுவை பிரதேசத்தைச் சேர்ந்த பர்ஹான் உட்பட நான்கு பிரதான சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகளின் பிரகாரம், மாவனெல்ல மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிளையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.