ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் முதல் பிரதியை நிகழ்வின் பிரதம விருந்தினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் வெளியிட, கிளிநொச்சி இளையோரின் எதிர்காலம் இன்றே அமைப்பின் தலைவர் திரு கணபதிப்பிள்ளை ஆனந்தவடிவேல் பெற்றுக் கொண்டார்.
இதேவேளை முதன்மைப் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழங்கி வைக்க விடுதலைப் புலிகளின் மூத்த போராளி பசீர் காக்கா எனப்படும் மு. மனோகரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் போராளி வெற்றிச் செல்வியும் யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தி. செல்வ மனோகரனும் வழங்கினார்.
நிகழ்வில் அறிமுகவுரையை செந்தூரனும், வெளியீட்டுரையை பிரதேச சபை உறுப்பினர் அ. சத்தியானந்தனும் வழங்கினர்.
விடுதலைப் போராட்டம் குறித்த பதிவாக பயங்கரவாதி முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்ட பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எக்காலத்திலும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக இந் நாவல் அமையும் என்றும் குறிப்பிட்டார்.
அழகியல், மொழி, படிமம், நாவல் களம் என்பனவற்றில் பயங்கரவாதி தேர்ந்த நாவலாக இருப்பதாகவும் கலைத்திறனிலும் கலை அழகியலிலும் முதிர்ச்சி பெற்ற இந்த நாவல் ஈழ நாவல்களில் தனித்து நிலைத்திருக்கும் என்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் குறிப்பிட்டார்.
இதேவேளை நிகழ்வில் பேசிய போராளி எழுத்தாளர் வெற்றிச்செல்வி, இந்த நாவலில் வரக் கூடிய பாத்திரங்களோடும் களத்தோடும் தானும் வாழ்ந்த ஞாபகங்களை நினைவுபடுத்தியதுடன் தீபச்செல்வனின் கவித்துவமான மொழி பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தீபச்செல்வனின் மனிதநேயம் மிக்க தலைசிறந்த படைப்பாளி என்று குறிப்பிட்டதுடன் கொள்கைக்காகவும் இனப்பற்றுக்காக உறுதியோடு பயணிக்கும் தீபச்செல்வன் ஒரு இலக்கியப் போராளி என்றும் புகழராம் சூட்டினார்.
நிகழ்வில் ஏற்புரை ஆற்றிய தீபச்செல்வன், மக்கள் இன்று வழங்கியுள்ள மகத்தான வரவேற்பு தனக்கு சிறந்த உற்சாகத்தை தருகிறது என்றும் புகழுக்கும் பணத்திற்குமாக தான் எழுதுவதில்லை என்றும் இன விடுதலைக்கான எழுத்துப் பயணம் தொடரும் என்றும் கூறினார்.
இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் தன்னை பயங்கரவாதியாக கூறி இலங்கை இராணுவம் அடக்கி ஒடுக்கிய நினைவுகளை பகிர்ந்ததுடன் அதனை சவாலாகக் கொண்டே அன்று போராட்டங்களில் ஈடுபட்டதாகவும் அக் காலத்து பயண நினைவுகள்தான் பயங்கரவாதி நாவலாக உருக்கொண்டது என்றும் குறிப்பிட்டார்.
தீபச்செல்வனின் உணர்வும் ஆழமும் அறிவும் கொண்ட உரைக்கு மக்கள் பெரும் வரவேற்பும் உற்சாகமும் அளித்தனர். நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய ஜனகா நீக்கிலஸ் நன்றியுரையை வழங்க நிகழ்வு நிறைவுபெற்றது.