பொங்கல் பண்டிகையன்று (இன்று) மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்காக 1,500 போலீஸார், பல்வேறு துறைகளின் அலுவலர்கள் தலைமையில் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே இன்றும், ஜன.16, ஜன.17-ல் நடக்க உள்ளன.
அலங்காநல்லூரில் ஜன.17-ல்நடக்கவுள்ள ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறும் 3 ஊர் ஜல்லிக்கட்டுகளுக்கான ஏற்பாடுகளை, அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர் செய்து வருகிறார்.
இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான பணிகளை மதுரை மாநகராட்சி செய்து வருகிறது. மேடை, பார்வையாளர் கேலரி, ஈரடுக்கு தடுப்பு வேலி, சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் காலோன் மேற்பார்வையில் அலுவலர்கள் பணிகளை செய்துள்ளனர்.
மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் 16 பேர் கொண்ட விழா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆலோசனையின் பேரில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டை நடத்துகிறது.
அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது. முதற்கட்டமாக 800 காளைகள், 400 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் 8 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறும். ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள்களம் இறங்குவர். வாய்ப்பிருந்தால் கூடுதல் காளைகள் அவிழ்க்கப்படும்.
இதில் திறமையாக காளைகளைஅடக்கும் 2 முதல் 3 பேர் அடுத்தடுத்த சுற்றுக்கு அனுமதிக்கப்படுவர். குழப்பத்தை தவிர்க்க ஒவ்வொரு சுற்றுக்கும் வெவ்வேறு வண்ண சீருடைகள் வழங்கப்பட்டுஉள்ளன. விதிகளை மீறுவோர் உடனே களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுவர்.
நேற்று மாலையில் போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் துணைஆணையர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் காளைகள் சேகரிக்கும் இடத்தில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் இறந்தார். இதனால் இந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த காளைகள், வீரர்களை தேர்வு செய்யதேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிறந்த காளை, வீரருக்கு கார் மற்றும் இரு சக்கர வாகனம் சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் தங்கக்காசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை பல நிறுவனங்கள், அமைப்புகள் வழங்க உள்ளன. பார்வையாளர்களும் சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட உள்ளனர். போட்டியில் உயிரிழப்பையும், காளைகள் துன்புறுத்தப்படுவதையும் தவிர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.