ராணுவ வீரரின் மார்பை துளைத்த கையெறி குண்டு: துணிச்சலாக அறுவை சிகிச்சை

137 0

ரஷியா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இருநாட்டு ராணுவ வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் போரின்போது உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உடலில் கையெறி குண்டு ஒன்று துளைத்துக்கொண்டு மார்பு பகுதியில் சிக்கியது. இதயத்துக்கு அருகில் சிக்கிய அந்த கையெறி குண்டு எந்த நேரத்திலும் வெடித்துவிடும் அபாயம் இருந்ததால், அறுவை சிகிச்சையின்போது வெடித்துவிட்டால் என்ன ஆவது என்ற அச்சத்தில் டாக்டர்கள் ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை செய்ய தயங்கினர்.

அதேசமயம் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குண்டை அகற்றாமல் விட்டால், குண்டு வெடித்து, அந்த வீரர் உடல்சிதறி இறக்கும் அபாயம் நிலவியது. இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஆண்ட்ரி வெர்பா மிகவும் துணிச்சலுடன் அந்த ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தார்.

அவரது பாதுகாப்புக்காக வெடிகுண்டு நிபுணர்கள் 2 பேர் அறுவை சிகிச்சை நடந்த அறையில் நிறுத்தப்பட்டிருந்தனர். மின்சார கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் கையெறி குண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் டாக்டர் ஆண்ட்ரி வெர்பா அவற்றை பயன்படுத்தாமல் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து ராணுவ வீரரின் மார்பில் இருந்து கையெறி குண்டை அகற்றினார்.

இதையடுத்து அங்கு தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்க செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் ராணுவ வீரர் நலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான சூழலில் துணிச்சலாக உயிரை பணயம் வைத்து ராணுவ வீரரை காப்பாற்றிய உக்ரைன் டாக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.