“உதயநிதியை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்” – திமுக நிகழ்வில் ஸ்டாலின் பேச்சு

106 0

 “என்னை திமுக இளைஞர் அணியின் ஒரு நிகழ்ச்சிக்கும் கூப்பிடவில்லை என்றாலும். உதயநிதி ஸ்டாலினை கண்காணித்துக் கொண்டு உள்ளேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி செயலியை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “நான் இப்போது பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். பிறந்து வீட்டிற்கு மட்டுமல்ல, வளர்த்த வீட்டிற்கும் வந்திருக்கிறேன். வளர்த்த வீட்டிற்கு மட்டுமல்ல, வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய வீட்டிற்கும் வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட உரிமையோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சிப் பாசறை 2.0, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞர் அணி செயலி, பயிற்சிப் பாசறை கூட்டத்தினுடைய புகைப்பட திரட்டு ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மிகப் பெரிய விழாவாக, மாபெரும் விழாவாக இதை எழுச்சியோடு, ஏற்றத்தோடு நம்முடைய இளைஞர் அணியின் அமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இதை நான் உள்ளபடியே தலைமைக் கழகத்தின் சார்பில் மனம்திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

உதயநிதியினுடைய தந்தையாக இருந்து மட்டுமல்ல, தந்தையாக இருந்து மகிழ்ச்சியடைகிறேன், தலைவனாக இருந்து பெருமைப்படுகிறேன். அந்த உணர்வோடு அவருக்கும் அவருக்கு துணை நிற்கக்கூடிய துணைச் செயலாளர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் இளைஞர் அணி நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி உதயநிதி பேசுகிறபோது “நான் இளைஞர் அணியின் செயலாளராக பொறுப்பேற்று மூன்று வருடம் ஆகிற்று. ஆனால், தலைவரை ஒரு நிகழ்ச்சிக்கும் கூப்பிடவில்லை” என்று சொன்னார். ஏன் கூப்பிடவில்லை? அதுதான் எனக்கும் புரியவில்லை. ஒருவேளை இன்றைக்கு நான் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய பொறுப்பின் காரணமாக, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிற காரணத்தால், அந்தப் பொறுப்பிற்கு தலைமையேற்றிருக்கிற காரணத்தால், எனக்கு பல்வேறு பணிகள் இருக்கிறது, அதற்கு நாம் இடையூறு தந்துவிடக்கூடாது என்று ஒருவேளை கருதி, அந்த நல்ல எண்ணத்தோடு அதை அவர் தவிர்த்து இருப்பார் என்று நான் எண்ணிக் கொண்டேன்.

ஆனால் நான் ஒவ்வொரு நாளும் அவரை watch செய்து கொண்டிருக்கிறேன். டி.வி-யில் பார்க்கிறேன், பத்திரிகைகளில் பார்க்கிறேன், ஊடகங்களில் பார்க்கிறேன். சமூக ஊடகங்களை பார்த்தீர்களென்றால், நல்ல செய்திகளும் வருகிறது, கேலி செய்து, விமர்சனம் செய்து, அதுபோன்ற செய்திகளும் வருகிறது, அதையும் watch செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று மாத்திரம் சொல்ல மாட்டேன், கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன்.

பொறுப்பேற்று இந்த மூன்று வருடத்தில், மிகவும் சிறப்பான பணிகளை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று பல அமைப்புகள் இருக்கின்றன, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி இதுபோன்ற பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன.

நான் இளைஞர் அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தபோது, நம்முடைய இளைஞர் அணி தோழர்களுக்கெல்லாம் நான் அடிக்கடி எடுத்துச்சொல்வது உண்டு, நம்முடைய சிவா இளைஞர் அணியின் துணைச் செயலாளராக எனக்கு துணையாக இருந்து பணியாற்றியிருக்கிறார். இதுபோல பலபேர் என்னோடு துணைநின்று பணியாற்றியவர்கள்.

அப்போதெல்லாம் நான் அடிக்கடி என்ன சொல்வது உண்டு என்றால், எத்தனை அணிகள் இருந்தாலும், நம்முடைய அணி தான் நம்பர்-1-ல் இருக்கிறது. இதனால் மற்ற அணிகளைச் சார்ந்தவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், உண்மை நிலை அது, எதார்த்த நிலை அது. அதனால் யாரும் அதைத் தவறாகக் கருத வாய்ப்பே கிடையாது. அதை ஏற்றுக்கொள்வார்கள். அந்த நிலையில் இன்றைக்கு நம்முடைய அமைப்பின் சார்பிலே பல அணிகள் இருந்தாலும், அந்த முதல் இடத்தில் இருக்கக்கூடிய அணியாக இந்த அணி இருப்பது பாராட்டுக்குரியது, பெருமைக்குரியது” என்று அவர் பேசினார்.