முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று முறை அரசியலமைப்பை மீறியுள்ளார் என்பதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுதந்திர கட்சியின் தலைவராக இவர் பதவி வகிக்கும் வரை சுதந்திரக் கட்சிக்கு விடிவு காலம் தோற்றம் பெறாது,ஆகவே மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கௌரவமாக விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பலவீனமான நிர்வாகத்தினால் ஏற்பட்ட விளையை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கௌரவமான முறையில் வரவேற்கிறோம்.
மைத்திரிபால சிறிசேன மூன்று முறை அரசியலமைப்பை மீறியுள்ளார்.ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது.
அத்துடன் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி குறுக்கு வழியில் பிரதமரை நியமித்து,பாராளுமன்றத்தை அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்டார்.
52 இரண்டு நாள் அரசியல் நெருக்கடி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி குண்டுத்தாக்குதல் வரை கொண்டு சென்றது.
52 இரண்டு நாள் அரசியல் மாற்றம்,பாராளுமன்றம் கலைப்பு ஆகியன அரசியலமைப்பிற்கு முரண் என நல்லாட்சியின் அரச தலைவராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தற்போது பொறுப்பில் இருந்து விலகியதால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது அதற்கு மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பினை மீறியுள்ளார் என்பது மூன்று முறை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது,ஆகவே சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகிப்பதற்கு இவருக்கு தார்மீக உரிமை கிடையாது,சுதந்திர கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவே இவர் செயல்படுகிறார்,சுதந்திர கட்சிக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமாயின் மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி கட்சியின் சிரேஷ்ட தரப்பினருக்கு இடமளிக்க வேண்டும்.
ஹெலிகொப்டர் சின்னத்தில் அண்மையில் சுதந்திர மக்கள் முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டது.இந்த கூட்டணியில் இணையுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மைத்திரிபால சிறிசேன இந்த கூட்டணியில் பிரதான பங்காளிக் கட்சி தலைவராக இருப்பதால் நான் கூட்டணியில் இணையவில்லை.நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இந்த கூட்டணிக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ள பின்னணியில் சுதந்திர மக்கள் முன்னணி கூட்டணி எவ்வாறு மக்கள் மத்தியில் செல்லும் என்பது பிறிதொரு பிரச்சினையாகும் என்றார்.