வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பங்களுக்காக நிவாரணத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுயதொழில் உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, ஜப்பான், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களின் ஒரு பிள்ளைக்கு 5,000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும், வெளிநாட்டில் இருந்து வந்து 5 வருடங்கள் பூர்த்தியாகாத தொழிலாளர்களின் பிள்ளைகளும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வந்து 5 வருடங்கள் பூர்த்தியாகாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 50,000 ரூபா பெறுமதியான சுயதொழில் உதவி வழங்கும் வேலைத்திட்டத்தையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆரம்பித்துள்ளது.
இந்த நிவாரணத் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும், இது தொடர்பில் தேவையான ஆலோசனைகளை பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.