நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்

179 0

 நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது அவசியம் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிரெகரி மீக்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் எனவும், கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் கடந்தகாலங்களில் வலியுறுத்தியிருந்த நிலையில், கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிரெகரி மீக்ஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியது இன்றியமையாததாகும் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், குறிப்பாக அனைத்து இலங்கையர்களையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கிய முன்நகர்வை மேற்கொள்வது அவசியம் என்றும் வலியறுத்தியுள்ளார்.