கொலை மிரட்டல், அச்சுறுத்தலால் அண்ணாமலைக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

117 0

அச்சுறுத்தல் காரணமாக தமிழகபாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறைஅமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவருக்கு ஏற்கெனவே மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உளவுத்துறை அளித்த அறிக்கையை தொடர்ந்து, அண்ணாமலைக்கு பாதுகாப்பை அதிகரித்து ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத அடிப்படைவாதிகள், மாவோயிஸ்ட்களிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வந்ததாகவும், அதைத் தொடர்ந்தே, அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்புவழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக மத்தியஉள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் தமிழகம் வந்து அண்ணாமலையின் வீடு மற்றும்அவர் தொடர்புடைய இடங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் புலன் விசாரணை மேற்கொண்டு அதன் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இசட் பிரிவு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அண்ணாமலைக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஒய்பிரிவு பாதுகாப்பில் 12 சிஆர்பிஎஃப்வீரர்கள் இருக்கும் நிலையில், இசட்பிரிவில் 28 முதல் 33 சிஆர்பிஎஃப்கமாண்டோ வீரர்கள் இருப்பார்கள். இவர்களைக் கொண்டு சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.