மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் காலமானார். அவருக்கு வயது 77. அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவத் துறையில் தேர்ந்த அனுபவம்கொண்ட நாகராஜன், நரம்பியல் சார்ந்த பல்வேறு நுட்பமான சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நெறிக்குழு தலைவராக இருந்தஅவர், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியராகவும் பொறுப்பு வகித்தார். சமீபத்தில் அவர் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்பு அவரது தலைமையில் எய்ம்ஸ் நிர்வாகக் குழுக் கூட்டம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி, கல்லூரியை பயன்பாட்டுக்கு கொண்டுவர முனைப்பாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், மருத்துவர் நாகராஜனுக்கு கடந்த 12-ம் தேதிநள்ளிரவு திடீரென நெஞ்சு வலிஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை 12.10 மணிக்கு அவர் உயிரிழந்தார்.
நாகராஜனுக்கு மனைவி மோகனராணி, மகள் கிருத்திகா, மருமகன் ஜெ.ராதாகிருஷ்ணன் (உணவுத் துறை செயலர்), பேரன்மருத்துவர் அரவிந்த் ஆகியோர் உள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: நரம்பியல் மருத்துவ சமூகத்துக்கு வழிகாட்டியாக இருந்த நாகராஜனின், மருத்துவத் துறை பங்களிப்புகள் நீண்டகாலத்துக்கு நினைவில் கொள்ளப்படும். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
முதல்வர் ஸ்டாலின்: தேசியநரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத் தலைவர், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் நாகராஜன். அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினருக்கும், மருத்துவத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவத் துறையினர், முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.