“தமிழக சட்டப்பேரவையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தில் பொய்யான தகவல் தெரிவித்ததற்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததுபோல் சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த பாஜக அனுமதிக்காது. இத்திட்டம் தொடர்பாக 2018 மார்ச்சில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படாது என்று தெரிவித்திருந்தது.
இத்திட்டத்தை செயல்படுத்தினால் பெரிய அளவிலான கப்பல்கள் வரும் என்று திமுக சொல்கிறது. ஆனால் 20 ஆயிரம் டன் எடையுள்ள கப்பலே இதில் வரமுடியாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இத்திட்டத்தால் திமுகவை சேர்ந்த டி.ஆர். பாலு, கனிமொழி ஆகியோரின் கப்பல் நிறுவனங்களே பயன்பெறும் என்றும், தொழில்முனைவோருக்கோ, மீனவர்களுக்கோ பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இத்திட்டத்தால் பயனில்லை என்று, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆர்.கே.பச்சூரி கமிட்டியும் தெரிவித்திருக்கிறது. எனவே சுற்றுச்சூழல், பொருளாதார அடிப்படையில் இத்திட்டத்தால் பயனில்லை. இருவர் நடத்தும் கப்பல் நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். ராமர் சேதுபாலம் இருக்கிறதா என்பதை கண்டறியவும், அந்த பாலம் இருந்தால் அதை பாரம்பரியசின்னமாக அறிவிக்கவும் உரிய ஆய்வுகளை நடத்த, கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு கமிட்டியை பிரதமர் அமைத்துள்ளார்.
3 ஆண்டுகளில் அந்த ஆய்வறிக்கை கிடைக்கவுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் அளித்த பதிலை, சட்டப்பேரவைத் தீர்மானத்தில் முதல்வர் திரித்து கூறியுள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தை அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார். பொய்யான இவ்விரு தகவலுக்காக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்துக்கு நன்மை கிடைக்க ஆளுநருடன் முதல்வர் இணக்கமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.