புகையிரத சேவையாளர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றதால் புகையிரத சேவை இரத்து செய்யப்படுகிறது என குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும்.புகையிரத சேவையை மறுசீரமைக்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (16ஆம் திகதி) முதல் நாளாந்தம் 30 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
புகையிரத சேவையாளர் பற்றாக்குறையால் புகையிரத சேவை இரத்து செய்யப்படுவதாக தொழிற்சங்கத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
கடந்த ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதி புகையிரத சேவையில் இருந்து ஒட்டுமொத்தமாக 410 பேர் ஓய்வுப் பெற்றுள்ளார்கள். இதில் 09 சாரதிகள்,13 உதவி சாரதிகள்,20 பாதுகாவலர்கள் மற்றும் 13 புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட ஏனைய ஊழியர்கள் உள்ளடங்களாக 410 பேர் ஓய்வுப் பெற்றுள்ளார்கள்.
சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்ள அரச சேவைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த 3000 பேரை புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.44 பேர் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுபட்டுள்ளார்கள்.
புகையிரத திணைக்களம் இலாபம் பெறும் அரச நிறுவனம் அல்ல 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை புகையிரத திணைக்களம் வருடாந்தம் 10 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.கடந்த ஆண்டு மாத்திரம் 12 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில் தான் புகையிரத சேவை முன்னெடுக்கப்படுகிறது.ஒரு மாத செலவில் அரை பகுதி தான் மாத வருமானமாக கிடைக்கப்பெறுகிறது.எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு கூட ஒருமாத வருமானம் போதுமானதாக இல்லை.
புகையிரத சேவை மறுசீரமைக்கும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 30 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படும்.
முன்னரை போல் கடன் பெறவும் முடியாது,நாணயம் அச்சிடவும் முடியாது.நெருக்கடியான நிலைமையை நிறுவன மட்டத்தில் முகாமைத்துவம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.