தேர்தலை நடத்த நிதி இல்லை எனக் குறிப்பிடுவது அடிப்படையற்றது

160 0

அரசியலமைப்பிற்கு அமைய தேர்தலை பிற்போட  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பிற்கு முரணாகவே இனி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முடியும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த நிதி இல்லை என அரசாங்கம் குறிப்பிடுவது அடிப்படையற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று (13) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இருப்பினும் தேர்தலை பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் பல சூழ்ச்சிகளை  மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தல் அல்லது குறைத்தல் தொடர்பான சட்டமூலத்தை எதிர்வரும் வாரம் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வன் போது சமர்ப்பிக்க அரசாங்க தரப்பு தீர்மானித்தது.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை சமர்ப்பித்தால் அது தற்போதைய தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கட்சி தலைவர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம்.

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தாக்கம் செலுத்தாது என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் ஊடாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசியலமைப்பு ஊடாக ஜனாதிபதி முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் சிறந்த தீர்மானத்தை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் தொடர்பில் அவதானத்துடன் உள்ளோம். அரசியலமைப்பின் ஊடாக தேர்தலை பிற்போடும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.இனி அரசியலமைப்பிற்கு முரணாகவே தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சிக்கி வேண்டும் என்றார்.