பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், நேரடி சாட்சியம் ஒன்றினை வெளிப்படுத்திக் கொள்வதற்காக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருளப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த விசாரணைகள் தொடர்கின்றன.
51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், ஜனசக்தி காப்புறுதி குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார்.
பொரளை பொது மயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 2022 டிசம்பர் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.
இந் நிலையில், குறித்த தினம், பொரளை கனத்தையில் நடந்த அணைத்து மரணச் சடங்குகள் தொடர்பிலும் சி.ஐ.டி.யின் அவதானம் தற்போது திரும்பியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
அதன்படி குறித்த தினம், பொரளை கனத்தையில் 14 மரணச் சடங்குகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ கூறினார்.
தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படும் நேரத்தில் அங்கு நடந்த மரணச் சடங்குகளுக்கு வந்த எவரேனும் சந்தேகத்துக்கு இடமான எவரையேனும் பார்த்திருக்கலாம் என்ற ஊகத்திலும், அவ்வாறு கண் கண்ட அல்லது நேரடி சாட்சியம் ஒன்று தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்வது தற்போதைய இந்த விசாரணையின் நோக்கம் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
எவ்வாறாயினும் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில், எந்த தீர்மானத்துக்கும் இதுவரை விசாரணையாளர்கள் வரவில்லை என கூறும் பொலிஸ் பேச்சாளர், இதுவரை சுமார் 185 பேரின் வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக கூறினார்.