சீனா மற்றும் இந்தியாவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை!

109 0

கடனை தள்ளுபடி செய்வதற்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு பேட்டியளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் நல்லது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் ரியர் அட்மிரல் எலைன் லயோபேக்கர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு இலங்கை செயற்பட்டு வருவதால், அனைத்து கடன் வழங்குனர்களும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க பிரதிநிதி தெரிவித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.