42 புகையிரத சேவைகள் இரத்து

98 0

புகையிரத சேவையில் நிலவும் சேவையாளர் பற்றாக்குறையால் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கும் வரை நாளாந்தம் 42 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பிரதான வீதியில் 20 புகையிரத பயண சேவைகள்,புத்தளம் வீதியில் 04 புகையிரத பயணச் சேவைகள்,களனி வழி வீதியில் 02 புகையிரத பயணச் சேவைகள்,கரையோர பாதையில் 16 புகையிரத சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்படும்.

இவ்வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த பல புகையிரத சேவைகள் முழுமையாக இரத்துச் செய்ய புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. பெரும்பாலான புகையிரத சேவைகள் வழமைக்கு மாறாக தாமதமடையும்.

புகையிரத சேவையில் சேவையாளர் பற்றாக்குறை பாரிய குறைப்பாடாக உள்ள நிலையில் கடந்த வருடம் 500 புகையிரத சேவையாளர்கள் ஓய்வுப்பெற்றதால் புகையிரத சேவை மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஆகவே புகையிரத சேவையில் நிலவும் சேவையாளர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்மானத்தை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.