உள்ளுராட்சிமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் தலையீடுகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக அவ்வாணைக்குழு எவ்வித தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்தும் கட்டுப்பணத்தை மறு அறிவித்தல் வரும்வரை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என பொதுநிர்வாகம், உள்ளக விவகாரம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் கடந்த 9 ஆம் திகதிமாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க முகவர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததுடன் பின்னர் அவர் அதனை நீக்கியிருந்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் வேட்புமனுத்தாக்கல் செய்வதிலும், அதனைத்தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவதிலும் இடையூறுகளைத் தோற்றுவிக்கும்.
தேர்தலுக்கு முன்னரான செயற்பாடுகளில் எவ்வகையிலேனும் இடையூறு ஏற்படுத்துவதற்கோ அல்லது தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கான பொதுமக்களின் ஜனநாயக உரிமையைத் தடுப்பதற்கோ மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின்மீது நிகழ்த்தப்படும் மிகமோசமான தாக்குதலாகவே அமையும்.
இதற்கு முன்னர் பல்வேறு ஆட்சியாளர்களால் தேர்தலுக்கு முன்னரான நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் மிகமோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தின.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் அதிகாரங்களுக்கு அமைவாக அவ்வாணைக்குழு எவ்வித தலையீடுகளுமின்றி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எனவே ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகளில் எவ்வகையிலேனும் தாக்கத்தையோ அல்லது தலையீட்டையோ ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுப்பதிலிருந்து ஜனாதிபதியும் அரசாங்கமும் விலகியிருக்கவேண்டியது அவசியமாகும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.