அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

89 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் பலவீனமான  தலைவரையும், அரசாங்கத்தையும் தோற்றுவித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளார்கள்.

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு நாட்டு மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக பதிலடி கொடுப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூர் அதிகார சபைகளுக்குமான கட்டுப்பணத்தை புதன்கிழமை (11) களுத்துறை மாவட்ட செயலாளர் பிரிவு காரியாலயத்தில் செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

பலவீனமான அரச தலைவராக கோட்டபய ராஜபக்ஷவை தெரிவு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த மக்கள் அந்த தவறை இரண்டரை வருட காலத்திற்குள் திருத்திக் கொண்டார்கள்.

நாட்டு மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை தேர்தல் ஊடாக ஜனநாயக முறையில் புறக்கணித்தார்கள், பொதுஜன பெரமுன அரசாங்கத்தை போராட்டத்தின் ஊடாக புறக்கணித்தார்கள்.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட இவ்விரு தரப்பினரும் தற்போது கூட்டணியமைக்க தீர்மானித்துள்ளமை நகைப்புக்குரியது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் பலவீனமான அரசாங்கத்தையும்,அரச தலைவரையும் தெரிவு நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளார்கள்.

நாட்டு மக்கள் இந்த ஏமாற்று செயல்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வலுவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.இவ்வார காலத்திற்குள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி முடிப்போம்.தேர்தலில் அதிக உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவோம் என்றார்.