அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வலியுறுத்தல்

78 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்புக்கு அமைய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும்,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் புதன்கிழமை (11) இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய தினத்தில் நடத்த ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் முன்னெடுத்த நடவடிக்கைகளை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கு தெளிவுப்படுத்தியது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் விடயம் அடிப்படையற்றது, ஆணைக்குழு இதுவரை எடுத்த அனைத்து தீர்மானங்களும் உறுப்பினர்களின் முழுமையான இணக்கப்பாட்டுக்கு உட்பட்டாகும், ஆணைக்குழுவிற்குள் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இதன்போது ஆணைக்குழுவிடம் வினவினர். தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மாத்திரம் உண்டு.அமைச்சரவையின் தீர்மானங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தாக்கம் செலுத்தாது. இந்த சுற்றறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கத்தை கோரியுள்ளோம் என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பிற்கு அமைய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய தேவை இல்லை, அரசியலமைப்பிற்கு அமைய ஆணைக்குழு செயல்படுகிறது.தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.