தேர்தலை நடத்தாமல்,பலவந்தமான முறையில் அதிகாரத்தில் இருக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது அரச நிர்வாக அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கை ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தலை ஏற்கும் பணிகளில் இருந்து விலகுமாறு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சுற்றறிக்கைக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பதிலடி கொடுத்துள்ளது.ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு அமைய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள், ஆகவே கட்டுப்பணம், வேட்புமனுக்கள் ஆகியவற்றை பொறுப்பேற்கும் நடவடிக்கையில்; அரச அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அரசாங்கம் செயல்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தலை நடத்தாமல் பலவந்தமான முறையில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தார்,இறுதியில் விளைவு பாரதூரமாக அமைந்தது, ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்,விளைவு பாரதூரமானதாக அமையும்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மைக்கு அரசாங்கம் கடும் அழுத்தம் பிரயோகிக்கிறது என்பது அரச நிர்வாகம். உள்நாட்டலுவல்கள். உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கை ஊடாக வெளிப்பட்டுள்ளது. தேர்தலை பிற்போட எவ்வழிகளிலும் இடமளிக்க முடியாது என்றார்.