தலைக்கவசம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் விற்பனைக்காக உள்ள முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கம் தரமொன்று இல்லை என்று அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹிரன்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தலைக்கவசம் அணிவது தொடர்பான 10 ஒழுங்குவிதிகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கில் செலுத்துகின்ற மற்றும் அதில் பயணிக்கின்ற ஒவ்வொருவரும் பாதுகாப்பான தலைக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும்.
குறித்த தலைக்கவசமானது, அணிபவரின் தலைக்கு அளவானதாக இருக்க வேண்டும். அத்துடன், நாடிப் பட்டி பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அணிபவரின் முகத்தை மறைக்கும் வகையில் பாதுகாப்பான தலைக்கவசம் அமையக் கூடாது.
பாதுகாப்பான தலைக்கவசம் ஒளித்தெறிப்பு எதுவும் இன்றி, சுலபமாக பார்க்கக்கூடியதாக தொண்ணூறு சதவீதம் தனியொரு நிறத்தில் இருத்தல் வேண்டும்.
தலைக்கவசம் தொடர்பான இலங்கையின் தராதரங்களுக்கு அமைய பாதுகாப்பான தலைக்கவசங்கள் அமைய வேண்டும் எனவும், வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் அணிவதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய வர்த்தமானி அறிவித்தல் உள்ளதாக குறிப்பிட்டு அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹிரன்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.