ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து விசேட இராணுவ பிரிவு!

253 0

கடந்த ராஜபக்ச ஆட்சியில் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து விசேட இராணுவ புலனாய்வு பிரிவு ஒன்று செயற்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத நொயார் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் கீழ் செயற்பட்ட அதிகாரிகளினால் இந்த விசேட பிரிவு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இடம்பெறுகின்ற செயற்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதே இந்த பிரிவின் செயற்பாடாகும்.

அங்கு அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல், தாக்குதல், கடத்தி சென்று காணாமல் ஆக்குவது மற்றும் கொலை செய்தல் ஆகிய நடவடிக்கைகள் இந்த பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் மற்றும் தெற்கில் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் கீத் நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் ஆகிய ஊடகவியலாளர்களை தாக்கிய சம்பவங்கள் இந்த பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் பிரகித் எக்னெலிகொடவை கடத்தி சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் இந்த பிரிவிற்கும் இடையில் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதென பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கீத் நொயாரை தாக்கியமை தொடர்பில் தற்போது வரையில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் ஐவரும் தங்கள் செயற்பாடு தொடர்பில் மேலும் சில தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நபர்களின் பிரதானியாக மேஜர் ஜெனரல் ஒருவர் தங்கள் செயற்பாட்டிற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற போதிலும் அப்போதைய புலனாய்வு பிரதானியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவே செயற்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும், யுத்தத்தின் பின்னரும் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவு தொடர்ந்து நடத்தி செல்லப்பட்டுள்ளது. இந்த புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக அப்போதைய கர்னல் அமல் கருணாசேகர என்பரே செயற்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவு பிரதானியான அமல் கருணாசேகர, அப்போதைய காலப்பகுதியில் இராணுவ தளபதியாக செயற்பட்ட சரத்பொன்சேகாவிடமே பொறுப்பு கூற வேண்டும்.

எனினும் அவர் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் என இந்த விசாரணைகளில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தொலைப்பேசி அழைப்புகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் அப்போதைய தேசிய புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் மேஜர் ஜெனரல் ஹென்தாவிதாரனவின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த புலனாய்வு பிரிவுக்கு பாதுகாப்பு செயலாளர் மாத்திரமே பொறுப்பு கூற வேண்டும். ஹென்தாவிதாரன தற்போது வரையில் காலி முகத்திடலில் உள்ள ஷங்கரிலா ஹோட்டல் திட்டத்திற்கு பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாக செயற்படுவதாக கொழும்பு ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.