இலங்கைக்கு 8 போர் விமானங்கள் : புதிய முயற்சியை கையாளும் பாகிஸ்தான்

265 0

இலங்கைக்கு JH-17 ஜெட் போர் விமானங்கள் 8 இனை விற்பனை செய்வதற்கான புதிய முயற்சிகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், இலங்கை விமானப்படை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு JH-17 விமானத்துக்கு எவ்-7 ரக ஜெட் போர் விமானம் ஒன்றை அன்பளிப்பாக வழங்குவதற்கு இஸ்லாமாபாத் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை பாகிஸ்தானிடம் இருந்து JH-17 போர் விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகளை கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்த போதும் அதனை இந்தியா தடுத்திருந்தது.

அதற்குப் பதிலாக தனது நாட்டுத் தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வழங்கத் தயார் என்று இந்தியா தெரிவித்திருந்ததாக அன்று செய்திகள் வெளியாகியிருந்தது.

இலங்கையின் விமானப்படைக்கு 8 தொடக்கம் 12 போர் விமானங்களை வாங்குவதற்காக அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், எந்த நாட்டு விமானத்தை கொள்வனவு செய்வது என்று முடிவெடுக்க முடியாத நிலையில் அரசு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறே இலங்கைக்கு JH-17 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆலோசனை குழுவொன்றை பாகிஸ்தான் பணியில் அமர்த்தியுள்ளதாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இரண்டு முக்கியமான நிறுவனங்களின் ஊடாக இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை அணுகுவதற்கு பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதில் ஒரு நிறுவனம், பாகிஸ்தான் விமானப்படையின் முன்னணி நிறுவனமாகும். இந்தக் குழுவுக்கு கொழும்பில் பாகிஸ்தானின் தூதுவராகப் பணியாற்றியவர் உதவி வருகிறார்.

இந்த தகவல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத போதிலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அரசினால் இதுவரையில் மறுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.