`மற்றுமொருமுறை மகாபாரதம்’ நூல் வெளியீட்டு விழா

109 0

மகாபாரதத்தால் நமது பார்வை விரிவடையும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறினார்.

வானதி பதிப்பகம் சார்பில், எழுத்தாளர் சத்யதேவ் எழுதிய `மற்றுமொருமுறை மகாபாரதம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் நூலை வெளியிட, மூத்த பத்திரிகையாளர் மாலன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். விழாவில், சுதா சேஷய்யன் பேசியதாவது:

ஆய்வாளர்கள் கருத்துபடி, தொடக்கத்தில் ஜெய என்ற சிறிய நூலாக வெளியானது மகாபாரதம். பின்னர், விஜயர் என்றும், வியாசருடைய பாரதம் என்றும் கூறப்பட்டது. தற்போது வியாசர் பாரதம் என்று அழைக்கிறோம்.

மகாபாரதச் சுவடுகள்: இந்திய, தெற்காசிய நாடுகளின் மரபு, ஆட்சி, பண்பாடுகளில் மகாபாரதச் சுவடுகள் உள்ளன. பல்வேறு மொழிகளிலும் மகாபாரதம் எழுதப்பட்டுள்ளது. கலை, காப்பிய வடிவத்தில், ஏதாவது ஓர் வடிவத்தில் மகாபாரதம் எங்கும் உள்ளது.

தமிழில்கூட பெருந்தேவனாரின் பாரதம் 8, 9-வது நூற்றாண்டில் இருந்தது. தொடர்ந்து, பாரதத்தின் பல சுவடுகள் வெளிவந்தன. அந்த வகையில், தற்போதுசத்தியதேவின் `மற்றுமொருமுறை மகாபாரதம்’ நூல் வெளிவந்துள்ளது. பொதுவெளியில் மகாபாரதம் படிக்கவும், வாசிக்கவும் காரணம், சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான்.

நல்ல நினைவுகளாக, வாசிப்புகளாக மகாபாரதம் இருக்கலாம். மீண்டும் மீண்டும் சிலவற்றைப் படிக்க வேண்டிய அவசியம், அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது. அந்த அவசியத்தை உணர்த்துவதுபோல மற்றொரு முறைமகாபாரம் தலைப்பு அமைந்துள்ளது. மகாபாரதத்தை மீண்டும் மீண்டும் படிக்கும்போது நமது பார்வை விரிவடையும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன், இசைக்கவி ரமணன், வானதி பதிப்பகம் உரிமையாளர் வானதி ராமநாதன், நூலாசிரியர் சத்யதேவ் உள்ளிட்டோர் பேசினர்.