இளைஞர் பிரதிநிதித்துவ சட்டமூலத்தை கொண்டு தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி

105 0

25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் வாரம் நிறைவேற்றி, நீதிமன்ற நடவடிக்கையூடாக தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. 

வேட்புமனு தாக்கலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்புமனு தயார்ப்படுத்தல் கட்டமைப்பை மாற்றியமைக்க முயற்சிப்பது முரண்பாட்டை தோற்றுவிக்கும் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பல தரப்பாக பிளவடைந்துள்ளார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற பிரச்சினையை பொதுஜன பெரமுன எதிர்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுனவினர் அண்மையில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

தாமரை மொட்டுச் சின்னத்தை முன்னிலைப்படுத்தி புதிய கூட்டணியினை அமைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுன முன்வைத்த யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை அமைத்து பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த யோசனையை பொதுஜன பெரமுன நிராகரித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தாராளமாக விலகிக் கொள்ளலாம்.

அரசாங்கத்தின் பலவீனத்தினால் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது.

எல்லை நிர்ணய அறிக்கையூடாக தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை கொண்டு தேர்தலை பிற்போட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ சட்டமூலம் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை பிரச்சினைக்குரியதாக உள்ளது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 17ஆம் திகதி நிறைவேற்றி, அதனை தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கையூடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டு, வர்த்தமானி வெளியிட்டுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையில் 25 சதவீத பிரதிநிதித்துவத்தை உள்வாங்குவது பிரச்சினைக்குரியதாக அமையும் என்றார்.