நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதன் மூலம் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுத்து, அதனை வெற்றிகொள்ள ஸ்திரமான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
அதற்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுவே சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது.
இருப்பினும், அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் அதனை பிற்போடுவதற்கு கடும் பிரயத்தனம் காட்டுவதாகவும், நாணய நிதியத்தின் நிதியுதவி தாமதமடைய இதுவே காரணம் என்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மக்களாணையினை இழந்துள்ள ஜனாதிபதி மற்றும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் காணப்பட வேண்டும்.
மேலும், அதன் முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமைந்துள்ளது. தேர்தல் மூலம் நாட்டு மக்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.
மேலும், ஜனாதிபதி ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவை திடீரென சந்தித்து கலந்துரையாடுவது என்பது சுயாதீனமாக செயற்படக்கூடிய தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் நடைபெறவிருக்கும் தேர்தலை பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் சதி என்றும் எண்ணத் தோன்றுகிறது.
அதேவேளை பொதுஜன பெரமுன அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை நடத்துவதற்கு பயப்படுகிறது. அவர்கள் மக்கள் மத்தியில் சென்று வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர்களுக்கு தெரியும்.
தேர்தல் இடம்பெற்றால் அவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள். அவர்களுக்கு மக்களாணை கிடைக்காது என்று அறிந்தே அவர்கள் தேர்தலை பிற்போடுவதில் கடும் பிரயத்தனம் காட்டுகிறார்கள்.
எனினும், தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று ஏற்கனவே நாம் உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளோம்.
அதனையும் மீறி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் மக்களின் மூலம் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சி என்ற வகையில் தேர்தலை வெற்றிகரமாக எதிர்நோக்க நாங்கள் தயார். நாட்டு மக்களின் முழுமையான ஆதரவு எமக்குண்டு என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு நாம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். நிச்சயம் நாம் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்போம். அதற்கான ஆற்றல் எம்மிடம் இருக்கிறது.
மேலும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச நாடுகள் எதிர்பார்ப்பது இலங்கையில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றே.
எனவே, அதனை தேர்தல் மூலமாகவே உருவாக்க முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி தாமதமடைய நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் இன்மையே காரணமாகும். தற்பொழுது காணப்படும் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை முன்னெடுக்கின்றபோது எதிர்காலத்தில் தேர்தலொன்று நடத்தப்படுமாயின், அதில் தற்போதுள்ள அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும் என்பது அவர்களுக்கு தெரியும்.
அதன் பின்னர் புதிதாக ஆட்சிக்கு வரும் அரசாங்கம் நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துமா என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. அதன் காரணமாகவே நிதியுதவி தாமதமாகிறது என்றார்.