ஆணைக்குழுவுக்கு மறைமுகமாக அழுத்தம் பிரயோகிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும்

101 0

ள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானமிக்கது. வடக்கு –  கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் சிறந்த தரப்பினரை தேர்தலில் களமிறக்குவோம்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மறைமுகமாக அழுத்தம் பிரயோகிப்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். தேர்தலில் போட்டியிட தயார் இல்லை என்றால் யானை, தாமரை மொட்டு தாராளமாக விலகிக்கொள்ளலாம். அது நாட்டு மக்களின் பிரச்சினையல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தாம் தயார் என்பதை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வேட்புமனுத் தாக்கல் திகதியூடாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அவர் தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போட பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திகதி என்பன அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களை எவ்வாறு சந்திக்க முடியும்.

அந்த பேச்சுவார்த்தையில் தேர்தலை நடத்த வேண்டாம் என மறைமுக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாளைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது மறைமுக அழுத்தங்களை ஆணைக்குழுவுக்கு பிரயோகிக்கும் தன்மையில் உள்ளது.

அரச தலைவர் என்ற ரீதியில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அழைத்தேன் என ஜனாதிபதி குறிப்பிட முடியாது. ஏனெனில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரச தலைவர் அல்ல. 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதி.

இந்த பாராளுமன்றத்துக்கு மக்களாணை கிடையாது. ஆகவே, பாராளுமன்றத்தின் தீர்மானங்களை நாட்டு மக்கள் மதிக்கப் போவதில்லை.

அரசியலமைப்பின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்பட வேண்டும். சட்டத்தின் பிரகாரம், தேர்தலை பிற்போடும் எந்த வழியும் ஜனாதிபதிக்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் கிடையாது. ஆகவே, மக்களாணைக்கு முரணாக பலவந்தமான முறையில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுக்கும் சகல முயற்சிகளையும் தோற்கடிப்போம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானமிக்கது. இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தேசிய அரசியல் சித்தாந்தத்தை தீர்மானிக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் பாரிய போராட்டங்களை தோற்றுவித்துள்ளார்கள். பலவீனமான அரச தலைவரை மக்கள் விரட்டியடித்தார்கள். இருப்பினும், மக்கள் போராட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை.

விரட்டியடிக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சார்பாக ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவை தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே, மக்கள் போராட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் போராட்டம் வெற்றிபெற வேண்டும். மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் தரப்பினரை தேர்தலில்    களமிறக்குவோம். பலமான தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

பாரம்பரியமான அரசியல் மற்றும் பொருளாதார   முறைமை பலவீனமானது என்பதை நாட்டு மக்கள் அனுபவ ரீதியில் விளங்கிக்கொண்டுள்ளார்கள். ஆகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாட்டுக்கு தீர்மானமிக்கதாக அமையும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக தனது நிலையை ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுன அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதியாக அல்ல, பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க கூட மக்கள் ஆதரவு வழங்கவில்லை.

ஆகவே, நாட்டு மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அறிந்துகொள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஜனாதிபதி நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு மறைமுகமாக தடையாக செயல்படக் கூடாது என்றார்.