இலங்கையில் 5 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இது, சிறுவர்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 9.9 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.
புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் 2016 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வின்படி, இலங்கையில் 5 முதல் 17 வயது வரை 45 லட்சத்து 71 ஆயிரத்து 442 சிறுவர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அவர்களுள், 41 லட்சத்து 18 ஆயிரத்து 781 சிறுவர்கள் பாடசலைக்கு செல்கின்றதாகவும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 பேர் பாடசாலைக்கு செல்வதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 704 சிறுவர்கள் வேலை செய்பவர்களாக உள்ளனர்.
அவர்களுள், 59 ஆயிரத்து 990 சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுகின்றபோதும், சிறுவர் தொழிலாளர்களாக அவர்கள் வகைப்படுத்தப்படவில்லை.
எஞ்சியுள்ள 43 ஆயிரத்து 714 சிறுவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சிறுவர் தொழிலாளர்களுள், 4 ஆயிரத்து 707 பேர் மட்டுமே அபாயகரமற்ற தொழிலில் ஈடுபவதாகவும், ஏனைய 39 ஆயிரத்து ஏழு சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபடுவதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.