தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தளவில் தாயக மண்ணில் திரட்சி பெற்றுவரும் தமிழ்த் தேசிய கட்சிகளின் இணைப்பு என்ற கோரிக்கை, அதற்காக மக்கள் நடத்தும் விழிப்புணர்வுப் போராட்டம் என்பவற்றை நீர்த்துப் போகச்செய்ய அருமருந்தாக அமையக் கூடியது உள்ளூராட்சித் தேர்தலை ரணில் பின்போடுவது. ரணிலுடனான ‘தேனிலவை’ ரகசியமாகப் பேண உதவக்கூடியது அவருடனான பேச்சுவார்த்தையைப் பகிரங்கமாக எச்சரிப்பது அல்லது முறித்துவிட்டு பந்தை அவர் பக்கமே உதைத்துத் தள்ளுவது.
இந்த மாதம் இருபதாம் திகதியுடன் ஜனாதிபதிப் பதவியின் முதல் ஆறு மாதங்களைப் பூர்த்தி செய்யவுள்ள ரணில் விக்கிரமசிங்க, தமது பதவிக் காலத்தின் முக்கிய திருநாளாக பெப்ரவரி மாதம் 4ம் திகதியை எதிர்பார்த்திருக்கிறார்.
அன்றைய தினம் தாம் நிகழ்த்தப்போகும் உரை, தேசிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வேண்டுமென்ற இலக்குடன், அரசியல் சதுரங்கத்தில் மிக லாவகமாக காய்களை நகர்த்துகிறார். தந்திரநரி, குள்ளநரி, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியல் சுவீகார வாரிசு என்ற பல பட்டங்களின் சொந்தக்காரரான ரணில், தமது 73 வயதில்தான் தமக்குத் தெரிந்த சகல வித்தைகளையும் சோதித்துப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இந்த வித்தைகளை அவரது ராஜதந்திரமாகப் பார்த்து சிலர் புல்லரிக்கின்றனர். வைரத்தை வைரத்தால் வெட்டுவதுபோன்று இவரது சூழ்ச்சிகளை சூழ்ச்சியால் வெட்டலாமெனவும் சிலர் நம்புகின்றனர்.
ஆறரை தசாப்தங்களுக்கு மேலாக ஒப்பந்தங்கள், இணக்கப்பாடுகள், பேச்சுவார்த்தைகள், நம்பிக்கைகளால் ஏமாற்றப்பட்ட ஓரினம் இப்போதும் ஏமாற்றப்படுகிறோம் என்பதைத் தெரிந்து கொண்டும் (எமக்கு நம்பிக்கையில்லாமல்தான் ஜனாதிபதியுடன் பேச்சில் பங்குபற்றுகிறோம் என்று கூட்டமைப்பின் சுமந்திரன் இந்த மாதம் ஐந்தாம் திகதி குறிப்பிட்டதை கவனிக்கவும்) ‘சதுரமேசை’க் கூட்டத்தில் இணைந்து கொள்வது அவசியமா?
கடந்தகால கசப்பான அனுபவங்கள் நிகழ்கால ஓட்டத்துக்கு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. நல்லாட்சிக் காலத்தில் அதிகாரபூர்வ எதிர்கட்சியாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், அதன் தலைவர் சம்பந்தனையும், பேச்சாளர் சுமந்திரனையும் ரணில் எவ்வாறு தமது தந்திர வலைக்குள் வீழ்த்தி, கடந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பை ரசாயன சோதனைக் குளத்துள் தள்ளி, உருவழித்து சேதப்படுத்தினாரென்பது பழங்காலக் கதையன்று. நிகழ்காலப் பாடம்.
இலங்கை அரசியலை அவர் எவ்வாறு இன்று கையாளுகிறார் என்பதை ஆழ்ந்து கூர்ந்து பார்க்க வேண்டும். வடக்கு தமிழர் பிரச்சனையை தீர்க்க அவர்களின் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாகச் சொன்னவர், பின்னர் நாடாளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து சர்வகட்சிக் கூட்டமாக மாற்றினார். ஷஅனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு| என்ற அவரது கோட்பாட்டுக்கு இது முற்றிலும் பொருத்தமானது.
அதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவரையும் பேச்சாளரையும் மட்டும் சந்தித்துப் பேசினார். இது உத்தியோகபூர்வ பேச்சல்ல என்று ஜனாதிபதி செயலகம் பின்னர் அறிக்கை விட்டது. கடந்த ஐந்தாம் திகதி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையும் சேர்த்து சந்திப்பு நடத்தினார்.
இது ஒருபுறமிருக்க, நாட்டின் 340 உள்;ராட்சிச் சபைகளுக்கும் சுமார் எண்ணாயிரம் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் நடைபெறப்போவதான அறிவிப்பு வெளியானது. இன்னும் நிச்சயமற்ற நிலையிலுள்ள இத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் வேலை மும்முரமாக இடம்பெறுகிறது. வேட்பாளர் நியமனங்கள் இம்மாதம் 18 முதல் 21ம் திகதிவரை ஏற்கப்படவுள்ளது.
இந்தத் தேர்தல் அறிவிப்பானது சகல அரசியல்கட்சிகளையும் குழப்பத்துக்குள் தள்ளியுள்ளது. முக்கியமாக, தமிழர் தரப்பே இதனால் பெரிதும் நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபட்டு சந்திக்க வேண்டுமென்ற குரல் மேலோங்கி நிற்கிறது.
சி.வி.விக்னேஸ்வரன், என்.சிறீகாந்தா, சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று கடந்த பொதுத்தேர்தலில் அதற்குச் சவாலாக நின்றவர்கள். இப்போது இவர்களுடன் கூட்டமைப்பின் பங்காளிகளான புளொட் மற்றும் ரெலோ தலைவர்களும் சேர்ந்து கூட்டமொன்றை நடத்தி புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்கி தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை அதன் தலைவராகப் பிரேரித்துள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தலை நோக்கியே புதிய கூட்டமைப்பின் தலைவராக, ஏற்கனவேயுள்ள கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசின் தலைவர் பிரேரிக்கப்பட்டுள்ளதுதான் இங்குள்ள பிரச்சனை. இது தமிழரசுக் கட்சியைச் சார்ந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் பேச்சாளர் சுமந்திரனுக்கும் வெறும் தலையிடி அல்ல, தீராத தலைவலி. விரைவில் நடைபெறவிருக்கும் தமிழரசுக் கட்சி மாநாட்டில் மாவை சேனாதிராஜாவை அதன் தலைவர் பதவியிலிருந்து ஓரங்கட்ட சாம் – சுமா இணையர் திட்டம் மேற்கொண்டிருக்கையில், அவரை புதிய கூட்டமைப்பு தலைவராக்குகிறது என்றால் அது எழுந்தமானமான ஒரு செயற்பாடல்ல.
சமகாலத்தில், வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக புதிய போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது. மாவை தலைமையில் பிரேரிக்கப்பட்டுள்ள புதிய கூட்டமைப்பை (கூட்டமைப்பு இலக்கம் – 2 என்று இப்போதைக்கு இதனைக் குறிப்பிடலாம்) ஆதரித்து, சகல தமிழ் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து இத்தேர்தலைச் சந்திக்க வேண்டுமென்ற பதாதைகளுடன் மக்கள் நடத்தும் போராட்டம் இது. மனதார இந்தக் கோரிக்கையை ஏற்கும் நிலையில் சம்பந்தனோ சுமந்திரனோ இல்லையென்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை.
இந்தக் களநிலையில்தான் கூட்டமைப்பின் தலைவர்களை தமது அமைச்சர்கள் சகிதம் ரணில் கடந்த ஐந்தாம் திகதி சந்தித்து உரையாடினார். இக்கூட்டமானது, பத்தாம் திகதியிலிருந்து நான்கு நாட்களுக்கு தொடர வேண்டிய எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படைப் பிரச்சனைகள் வேறு, அரசியல் பிரச்சனைகள் வேறு என்று பிரித்து கையாளப்படும் இரண்டிலுமே இதுவரை எந்த முன்னேற்ற அறிகுறியும் காணப்படவில்லை, எல்லாமே பேச்சளவில்தான் என்ற ஐயம் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.
காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீளளித்தல், அரசியல் கைதிகள் விடுதலை என்பவை ஓர் அங்குலம்கூட முன்னேறவில்லை. அரசு வழங்கிய முன்னைய உறுதிமொழிகளை நிறைவேற்றாவிடின், பேச்சுவார்த்தையை தொடர்வதில் அர்த்தமில்லையென்று ஜனாதிபதி ரணிலிடம் தாங்கள் தெரிவித்ததாக கூட்டமைப்பினர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
ரணில் தங்களை ஏமாற்றுகிறார் என்ற தொனியில் கடும் விசனத்துடன் சம்பந்தன் கருத்தை வெளியிட்டதையும் ஊடகங்கள் பிரசுரித்துள்ளன. கூட்டமைப்புக்கு சவாலாக இன்னொரு கூட்டமைப்பு உருவாகிவரும் நெருக்கடி, அதற்கு ஆதரவாக பொதுவெளியில் உருவாகி வரும் மக்கள் எழுச்சியின் பாதிப்பு என்பனவற்றிலிருந்து கொஞ்சமாவது விடுபடுவதற்காக சம்பந்தன் கடும்தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார் என்று எண்ண இடமுண்டு.
இவ்வாறான கருத்துக்கு ஏற்புடையதாக ரணிலுக்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை வாசகங்கள் அமைந்துள்ளன. ‘இருதரப்புகளுக்கிடையில் இதுவரை இடம்பெற்ற பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. அடுத்த பேச்சுவார்த்தை பத்தாம் திகதி ஆரம்பமாவதற்கு முன்னர் தீர்வு தொடர்பான வரைபை அரசு தரவேண்டும். இல்லையேல் பேச்சுவார்த்தை தொடராது. எங்களை அரசு ஏமாற்ற முனையுமானால் மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் (இதுதான் மாவையரின் வாலாய உச்சரிப்பு). மோசமான விளைவுகள் காத்திருக்கிறது” என்று சுமந்திரன் கர்ச்சித்துள்ளார்.
எந்த மக்களை ஒன்று திரட்டி போராடப் போகிறார் என்ற விபரம் இல்லை. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இணைக்குமாறு கூட்டமைப்பினரை நோக்கி மக்கள் நடத்தும் போராட்டத்தை மதிக்காத சுமந்திரனுடன் சேர்ந்து போராட எந்த மக்கள் தயாராக உள்ளனர் என்பது புரியவே இல்லை.
அபகரிக்கப்படும் தமிழர் காணிகள் தொடர்பாகவும், ராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் கூட்டமைப்பினருக்கு ரணில் அளித்துள்ள பதில் வழுவழுப்பானது.
1. வனவளத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலித்திட்டம் ஆகியவை ஊடாக வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு விடயங்களை உடனடியாக நிறுத்துமாறு ரணில் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இது உண்மையானாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தளவுக்கு இதனை ஏற்று செயற்படுவார்கள் என்பதில் நம்பிக்கையில்லை. கோதபாய ராஜபக்ச பதவி துறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கூட்டமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் காணிகள் சுவீகரிப்புப் பற்றி அவரது கவனத்துக்குக் கொண்டுவந்த வேளை அது எதுவுமே தமக்குத் தெரியாதது போன்று நடித்ததும், இரண்டு அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு சுமந்திரனிடம் கூறியதும் (எல்லாம் காற்றோடு காற்றாகப் போய்விட்டது) நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
2. உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் வடக்கில் ராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் காணிகளில் ஒரு பகுதியை விடுவிப்பது தொடர்பில் ராணுவ அதிகாரிகளை ரணில் யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ரணில் தலைமையில் தேசிய பொங்கல் விழா (நவீன சொல்லாடல் இது) நடைபெறவுள்ளது. தமிழரின் தைப்பொங்கல் வேறு, அரசாங்கம் முன்னெடுக்கும் தேசிய பொங்கல் வேறு போன்று இது தெரிகிறது. தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றவிருக்கும் ரணில் அதே தினம் காணி அபிவிருத்தி தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் ஷஸைட்| கூட்டம் நடத்தப் போகிறாராம்.
நேர்மையாக இந்தக் காணிகளை மீளளிப்புச் செய்ய வேண்டுமானால், தேசிய பொங்கல் விழாவுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளை கொழும்புக்கு அழைத்து பேசி முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி என்ற பதவி வழியாக ரணிலுக்குண்டு. ஆனால் அதனை அவர் செய்ய மாட்டார். தேசிய பொங்கல் விழா எந்த விக்கினமும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற வேண்டும், காணிகள் விடுவிப்பு என்று தமிழரை நம்ப வைப்பது அதற்கு வலுவூட்டுவதாக அமைய வேண்டுமென்பதே அவரது தந்திர அரசியல்.
சம்பந்தன் பாணியில் தீபாவளியில் தீர்வு, வருடப் பிறப்பில் தீர்வு, தைப்பொங்கலில் தீர்வு என்றவாறு, ரணிலும் சுதந்திர தினத்துக்கு முன் தீர்வு, தேசிய பொங்கல் விழாவுடன் தமிழர் காணி விடுவிப்பு என்று சொல்வதைக் கேட்டு நம்பி ஏமாறுவது தமிழர் தலையெழுத்தாகி விட்டது.
இப்போதுள்ள நிலைமையில் உள்;ராட்சித் தேர்தல் என்பது நீதிமன்றத் தீர்விலும் அரசமைப்பு நடைமுறையிலும் தங்கியுள்ளது. தமிழரின் எந்தப் பிரச்சனையானாலும் ஏதோ ஒரு பெருநாள் அல்லது கொண்டாட்ட நாளுடன் இழுபறிக்குள் நகர்வதாக படம் காட்டப்படுகிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தளவில் தாயக மண்ணில் திரட்சி பெற்றுவரும் தமிழ்த் தேசிய கட்சிகளின் இணைப்பு என்ற கோரிக்கை, அதற்காக மக்கள் நடத்தும் விழிப்புணர்வுப் போராட்டம் என்பவற்றை நீர்த்துப் போகச்செய்ய அருமருந்தாக அமையக் கூடியது உள்;ராட்சித் தேர்தலை ரணில் பின்போடுவது. ரணிலுடனான ஷதேனிலவை| ரகசியமாகப் பேண உதவக்கூடியது அவருடனான பேச்சுவார்த்தையைப் பகிரங்கமாக எச்சரிப்பது அல்லது முறித்துவிட்டு பந்தை அவர் பக்கமே உதைத்துத் தள்ளுவது.
பனங்காட்டான்