நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் தோட்ட ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் வீதியோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வழிப்பிள்ளையாருக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (7) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு 11.30 மணியளவில் சத்தம் கேட்டு ஊர் மக்கள் சிலர் கோவிலுக்குச் சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டுப் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக ஆலய நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இத்திருட்டு சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 10 மற்றும் 16 வயது சிறுவர்கள் இருவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிறுவர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை தாமே திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
அத்துடன் திருடப்பட்ட பணத்தினை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கூறியுள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக நுவரெலியா, லிந்துலை, நானுஓயா ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல பகுதிகளில் உள்ள இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியல் பணம், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் திருட்டுப்போன சம்பவங்கள் பல இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.