கடலட்டைப் பண்ணைக்கு எதிராக மக்கள் போராடும் நிலையில் அதற்கு அனுமதி வழங்கியமை வெறுப்புக்குரியது!

106 0

கடலட்டைப் பண்ணைக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் அதற்கு அனுமதி வழங்கியமை வெறுப்புக்குரியதாகும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அன்ரனிஜேசுதாஸ் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு   யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடபகுதியில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினை கடலட்டைப்பண்ணை உருவாக்கம். குறிப்பாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தான்தோற்றித்தனமாக உருவாக்கப்படுவதால் அவர்களின் தொழில் மற்றும் தொழில்சார் விடயங்கள் பாதிப்படைகின்றது.

கிராஞ்சியில் 100 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வரும் நிலையில் போராட்ட இடத்திற்கு முன்னாலே 83 மீனவர்களுக்கு கடலட்டைப் பண்ணைக்கு அனுமதி வழங்கிய நிகழ்வானது கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக அரசின் முக்கிய அமைச்சராக இருப்பவர் இவ்வாறு செயற்படுவது வெறுப்புக்குரியதாகும்.

பூநகரி பிரதேச செயளாளர் எவ்வித கடலட்டைப் பண்ணைக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனக் கூறிய போதும், அமைச்சர் எவ்வாறு அனுமதி வழங்கினார் என்ற விடயம் கேள்விக்குரியது.

இதனால் சிறு மீன்பிடியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளால் கரையோரத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் தொழில் செய்ய ஆழ்கடலுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

அமைச்சுப் பதவிக்கு வந்ததும் இந்திய மீனவர் பிரச்சினை, சட்டவிரோத மீன்பிடிக்கு தீர்வு என கூறிய அமைச்சர் தற்சமயம் சிறு மீனவர்களுக்கு பாதிப்பேற்படுத்தும் விடயத்திற்கு ஆதரவளிப்பானது வேண்டத்தகாத விடயமாகும்.

இலங்கையிலும் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்து வருகின்றது, குறிப்பாக முல்லைத்தீவுப் பகுதிகளில் வழமையாக கைகளால் கரைவலைகளை இழுக்கும் செயற்பாட்டிற்கு மாறாக ரக்டர் ரக உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலை இழுக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

மயிலிட்டி துறைமுகத்தின் பெருமாபாலான பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ளது. ஆகவே வளமான பிரதேசங்கள மக்கள் உரிய பயனடையாத நிலை காணப்படும் நிலை தொடர்ந்தவண்ணமுள்ளது.

இவ்வாறு தீர்க்கப்படாத  மக்கள்சார் பாரிய பிரச்சினைகள்  காணப்படும் நிலையில் அரசாங்கத்தில் பொறுப்புள்ள அமைச்சராக அங்கம் வகித்துக்கொண்டு  மக்களின் நலனில் அக்கறையின்றி தொடர்ந்தும்  செயற்பட்டு வருவது கண்டிக்கத்தக்க விடயமாகும். என்றார்.