பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்

166 0

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க மாகாண அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தி உள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டுக்கு தலைமை வகித்துப் பேசிய ஷெபாஸ் ஷெரீப், ”பாகிஸ்தானில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுத்துள்ளது. அதனை ஒழிக்க அனைத்து மாகாண அரசுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பயங்கரவாதிகளாலும், போராளிகளாலும் நாட்டின் உறுதியை ஒருபோதும் அசைக்க முடியாது. நாட்டின் பாதுகாப்பிற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய அரசு தயாராக உள்ளது” என தெரிவித்தார்.

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக மாகாண அரசுகளுடன் ஆலோசனை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை செயலாளர், பயங்கரவாத தடுப்பு அமைப்பான நாக்டா(Nacta) ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இது குறித்த அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். பாதுகாப்புக்கான தேசிய அமைப்புகள், மாகாண பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் இரு தரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்றும் பிரதமர் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ராணா சனாஉல்லா சமர்ப்பித்தார். உள்துறை அமைச்சக ஆலோசகர், பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், மாகாண காவல்துறை தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.