கிழக்கில் தற்போது மண் அகழ்வு மற்றும் காணி அபகரிப்பு செயற்பாடுகள் மட்டுமே இடம்பெறுகின்றது

92 0

கிழக்கினை மீட்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு இன்று மண் அகழும் செயற்பாடும், காணி அபகரிப்பு செயற்பாடுகள் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரிகள் இவ்வாறானவர்கள் மேற்கொள்ளும் காணி அபகரிப்புக்களை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மின்சக்திக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜயசேகர மின்கட்டணத்தை உடனடியாக அதிகரித்தேயாக வேண்டும் இல்லாவிட்டால் மக்கள் ஆடு, மாடுகள் போல் இருட்டில் வாழப் பழகிக் கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றார்.

இதனை மறுபுறமாக நோக்கினால் செலவை அதிகரிக்கக் கூடிய விதத்தில் 12 புதிய அமைச்சுக்களை நியமிப்பதற்காக அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கின்றது.

அதேபோன்று 6 ஆளுநர்களை நியமிப்பதற்கான செயற்பாடும் முன்னெடுக்கப்படுகிறது.

இப்போது பார்க்கின்றபோது மக்கள் வறுமையில் தள்ளாடுகின்ற நிலையில் அவர்களுக்கு மானியம் கொடுப்பதா? நிவாரணம் கொடுப்பதா? என்று சிந்திக்க வேண்டிய அரசாங்கம் மேலும் மேலும் வரிச்சுமைகளை அதிகரிப்பதன் மூலமாக மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கின்ற செயற்பாடு போன்று இந்தச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது.

குறிப்பாகச் சொல்லப் போனால் இரண்டே இரண்டு வருடங்களில் பாரிய பொருளாதார நெருக்கடியை இந்த அரசு ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்நிலையில் வெங்காய இறக்குமதியின் போது அவர்கள் கிலோ ஒன்றுக்கான 50 ரூபா வரியினை 25 சதவீதமாகக் குறைத்ததன் காரணமாக அரசுக்கு 1600 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நஷ்டம் என்பது மக்களையே பாதித்திருக்கிறது.

அதே போன்று செல்வந்தர்கள் மீதான வரியினைக் குறைத்ததன் மூலமாக 60 ஆயிரம் கோடி ரூபா வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது.இதனடிப்படையில் வெங்காயம், வெள்ளைப்பூடு, எண்ணெய் இறக்குமதி என்று எல்லாப் பக்கத்திலும் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை மக்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தை இல்லாமல் செய்து விட்டனர்.

இன்று மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறார்கள்.

அதாவது வரவில்லாமல் மக்கள் திண்டாடுகின்ற போது மக்கள் மீது வரிச்சுமையினைச் சுமத்துகின்ற செயற்பாடு என்பது மக்கள் மயமான அரசு என்பதை விடுத்து, இது அதிகார வர்க்கத்தின் ஆட்சி என்ற அடிப்படையில் தான் செயற்படுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

12 அமைச்சுக்களை இப்போது அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இங்கிருக்கின்ற அமைச்சை எடுத்துக் கொண்டால், மட்டக்களப்பைப் பொறுத்தமட்டில் 1 இலட்சம் கிலோமீட்டர் வீதியமைக்கின்ற செயற்பாட்டில் கொமிசன்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

இது விடயத்தில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் 45 கோடி ரூபாய் வரை தரகுப் பணம் பெறப்பட்டதாக குற்றச் சாட்டுக்கள் உள்ளது.

இந்நிலையில் மக்களுக்குச் செலவு செய்யப்பட வேண்டிய பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு அபிவிருத்தி என்பது பலவீனமாக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகின்றது.

எனவே அரசு இந்தப் 12 அமைச்சுக்களையும் நியமிப்பதை விடுத்து, மக்களுக்கு மானியம் மற்றும் நிவாரணம் கொடுக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

ஏனென்றால் அரசின் செயற்பாடுகள் காரணமாகத்தான் இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதே ஒழிய, மக்களின் செயற்பாடுகள் காரணமாக இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை.

இந்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் கூறிக் கொண்டிருக்கிறார், அமைச்சர் அதிகரிக்க வேண்டுமென்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் மக்கள் பக்கமாக நின்று சிந்திக்கின்ற போது உழைப்பு இல்லை, வருமானம் இல்லை. கிட்டதட்ட 65 இலட்சம் மக்கள் உணவுப் பாதுகாப்பு இல்லாத நிலையில் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கின்றது.

தற்போது நியமிக்கப்படும் ஆளுநர்கள் கூட ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்தவே செய்யப்படுவதாக நாங்கள் கருதுகிறோம்.

விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் போது தம்மை வெற்றி பெறச் செய்யும் பிரச்சாரப் பீரங்கிகளாகப் பயன்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

எனவே இவ்வாறான விடயங்கள் தேவைதானா? என மக்களும் நாங்களும் சிந்திக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த திங்கட்கிழமை காந்தி சதுக்கத்தில் ஓர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கைக்குழந்தைகளோடு தாய்மார் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

மண்முனை- வடக்குப் பிரதேசம் காணித் தட்டுப்பாடு உடைய பகுதியாகும். மக்களுக்குத் தேவையான காணிகளை வழங்குவதிலே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற பிரதேசத்திலிருந்து இங்கிருக்கின்ற அரசியல் அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் காணிகளை அபகரிப்பதாக அவர்கள் தமது ஆர்ப்பாடத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்போது கிழக்கை மீட்கின்ற செயற்பாடு எனச் சொல்லிக் கொண்டு மண் அகழ்கின்ற செயற்பாடுகளும், காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகளும் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.

எனவே அரச தரப்பில் இருக்கின்ற நிருவாகிகள் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறார்களா? என்ற கேள்வி எழுகின்றது.

மக்களுக்குச் சேர வேண்டிய காணிகள் தனிப்பட்ட அதிகாரக் குவிப்பில் இருக்கின்றவர்களுக்கு வழங்கப்படுவதென்பது மக்களை ஏமாற்றித் தாங்கள் பலன்களை அடைந்து கொள்கின்ற ஒரு செயற்பாடாகவே உள்ளது.

அன்றைய காலகட்டத்தில் மண் என்பது பாரிய வாகனங்கள் மூலமாக ஏற்றப்பட்டுக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போது புகைவண்டி மூலம் மண்வளம் சூறையாடப்படுகின்றது.

இந்நிலையில் கிழக்கை மீட்பதென்பது காணிகளை அபகரித்துக் கொண்டு மண் வியாபாரம் செய்யும் செயற்பாடுதானா? என்று கேட்க வேண்டியிருக்கின்றது.

 

மாவடி ஓடை, புளுட்டுமான்ஓடை, மண்முனை – வடக்குப் பிரதேசம், கிரான் பிரதேச செயலகம், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகம் போன்ற இடங்களில் காணப்படுகின்ற காணிகள் அபகரிக்கப்படுவதாக மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மக்களை ஏமாற்றி நீங்கள் செய்த அரசியல் போதும். அதற்குரிய பதில்களை வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.