வீட்டுத்திட்டத்தை நம்பி குடிசைகளை இழந்து தவிக்கும் மக்கள்

124 0

போர் உள்ளிட்ட பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் வசிப்பதற்கு வீடின்றி அவதிப்படுபவர்களின் நிலை வேதனையளிப்பதாக  உள்ளது.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்தகால அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தபோது யுத்தத்தால்  பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்கள் மற்றும் புதிதாக திருமணமானவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது பயனாளிகள் தாம் அதுவரை வசித்த குடிசைகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகளை அமைப்பதில் ஆர்வம் காட்டிவந்தனர்.

எனினும், அரசாங்கம் மாற்றமடைந்ததை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுத்திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியது.

அதனால் வசித்துவந்த குடிசைகளையும்  அகற்றிவிட்டு, புதிய வீட்டுக்கான கட்டுமானப் பணிகளையும் நிறைவு செய்ய முடியாத நிலையில் பல குடும்பங்கள் வீடுகளற்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டன.

வீடின்றி தவிக்கும் அந்த மக்களின் துயர நிலையே இன்றும் தொடர்கிறது.

இவ்வாறான சூழ்நிலையையே தாமும் எதிர்கொள்வதாக மன்னார் மாவட்டம், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

இவர் பாடசாலைக்கு செல்லும் நான்கு பிள்ளைகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.

வீட்டுத்திட்டத்தை நம்பி, வசித்துவந்த குடிசையையும் இழந்து, வாழ்வதற்கு தகுந்த இடமின்றி அவதிப்படுவதாக கூறுகிறார்.

புதிய வீட்டை நம்பி, தற்காலிகமாக அமைத்திருந்த குடிசையும் பழுதடைந்துள்ளமையால் அதில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில், மழைக் காலங்களில் குழந்தைகளோடு  வசிக்க கடினமான நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குடும்பத் தலைவன் கூலி வேலைக்குச் சென்று வந்தாலும், இன்றைய பொருளாதார நெருக்கடி  ஏற்படுத்தியிருக்கும் சிரமங்களுக்கு மத்தியில் குடிசையையேனும் திருத்தியமைக்க முடியாதுள்ளது என்றும் அந்த பெண் கூறுகிறார்.