ஆப்பிரிக்க நாடான செனகலில் நாடாளுமன்ற நிகழ்வின்போது கர்ப்பிணி எம்.பியை தாக்கிய இரு எம்.பிக்களுக்கு தலா ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செனகலில் கடந்த மாதம் நீதித் துறை தொடர்பான பட்ஜெட் வெளியிடப்பட்டது. அப்போது ஆளும் கட்சி ஆதரவு எம்.பி.யான ஏமி என்டியாயேவுக்கும், எம்பிக்கள் மமடோ நியாங், மஸ்சட்டா சாப் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் ஏமி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். நாற்காலிகளை அவர் மீது வீசியும், அவரது வயிற்றில் ஏட்டி உதைக்கவும் முயல்கின்றனர். இந்தச் சண்டையின்போது ஏமி மயங்கி விழுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், எம்.பி ஏமி மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கில் எம்.பி.க்கள் மமடோ நியாங், மஸ்சட்டா ஆகியோருக்கு தலா 6 மாத கால சிறைத் தண்டனையும், 150 டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது இருவரும் ஏமியை தாக்கியதை ஒப்புக்கொள்ளவில்லை. நீதிமன்றத்தில் வீடியோ காட்சிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் தங்கள் குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.இச்சம்பவம், நாடு முழுவதும் பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் நாடு முழுவதும் குடும்ப வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரமாகவும் மாறியது.