வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக மல்லாவியிலும் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (ஜன. 6) காலை 11 மணியளவில் போராட்டம் இடம்பெற்றது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள ஒன்றாக்கப்பட்டு, வடக்கு, கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்”, “அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்”, “இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசால் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும்” போன்ற பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் நேற்று ஆரம்பமாகி தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்த வகையில் இந்த போராட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.